தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுப் பேருந்துகளால் முடியாதது ஏன்? விரிவான அலசல்!

வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது, அதே வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகளை இயக்கும் அரசுப் பேருந்துகளால் மட்டும் லாபம் ஈட்ட முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
தனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுப் பேருந்துகளால் முடியாதது ஏன்? விரிவான அலசல்!


சென்னை: வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கும் தனியார் பேருந்து நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது, அதே வழித்தடத்தில் ஏராளமான பேருந்துகளை இயக்கும் அரசுப் பேருந்துகளால் மட்டும் லாபம் ஈட்ட முடியாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

நிதிச்சுமை காரணமாக பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு கடந்த வாரம் அதிரடியாக அறிவித்தது. அரசின் நிதிச்சுமையை இப்படி மக்கள் மீது திணிப்பதா என்று ஏழை மக்களின் கோபம் ஒருபுறம், தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டும்போது அரசுப் பேருந்து நிறுவனங்கள் லாபம் ஈட்ட முடியாதது ஏன் என்ற கேள்வியும் ஒருசேர எழுகிறது.

இதற்குக் காரணம், அரசுப் பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படாததால், பொதுமக்கள், வெளியூர் பயணங்களுக்கு தனியார் பேருந்துகளையே விரும்புவதாக சென்னை - ஆரணி இடையே பேருந்துகளை இயக்கி வரும் தனியார் பேருந்து நிறுவனத்தின் மேலாளர் சேகர் கூறுகிறார்.

பேருந்து இருக்கைகள் சரியாக இருக்காததும், கைப்பிடிகள் உடைந்திருப்பதும் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமல்ல.. அனைத்து இருக்கைகளையும் நிரப்புவதற்காக நாங்கள் பல இடங்களில் நிறுத்திச் சென்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் செல்லுமிடத்தை அடைந்துவிடுகிறோம் என்பதே பயணிகளுக்கு மிகப்பெரிய விஷயமாகத் தெரிகிறது என்கிறார் அவர்.

இதையெல்லாமும் தாண்டி, அதிகமான பேருந்துகளை இயக்கும் அரசுப் பேருந்துகள், பழைய கட்டணத்தையே வசூலித்து வரும் தனியார் பேருந்து நிறுவனங்களைப் போல லாபம் ஈட்டாதது ஏன் என்ற கேள்வி இன்னும் விடைகிடைக்காமல் எழுந்துகொண்டுதான் உள்ளது.

போக்குவரத்துக் கழகத்துக்கு உள்ளேயும் சரி, சமூக ஆர்வலர்களும் சரி பலரும் சொல்லும் தகவல்கள் பல்வேறு வகையாக உள்ளன. அதாவது, பேருந்துகளை சரியாகப் பராமரிக்காதது, சிலப் பிரிவு ஊழியர்களுக்கு அதிக ஊதியம், ஏராளமான சலுகைகள் போன்றவையும் நட்டத்துக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்கிறார்கள்.

கோவை, திருச்சி போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட அதே கட்டணத்தில்தான் தனியார் பேருந்து நிறுவனங்கள் பேருந்துகளை இயக்கி லாபம் சம்பாதித்து வருகின்றன. இதில் அதிக கட்டணம் வசூலிக்க வசதியாக அரசுப் பேருந்துகள் டீலக்ஸ் பேருந்துகளை அறிமுகப்படுத்தியும் லாபம் சம்பாதிக்க முடியவில்லை.

தனியார் பேருந்து நிறுவனங்களில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தினக் கூலியாக ரூ.550ம், அன்றைய தினத்தின் டிக்கெட் விற்பனையில் 5 சதவீத கமிஷன் தொகையும் வழங்கப்படுகிறது. இதைத்தவிர, வேறு எந்த சலுகைகளோ, பணி உத்தரவாதமோ கிடைப்பதில்லை.

இது குறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறுகையில், தனியார் நிறுவன பேருந்துகளைப் போல அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. நமது பேருந்துகள் திட்டமிட்ட நேரத்தில் இயக்கப்பட வேண்டும். வெறும் 20 அல்லது 25 பயணிகள் இருந்தாலும் கூட பேருந்துகளை இயக்கித்தான் ஆக வேண்டும். குறிப்பிட்ட வேகத்திலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என்பதால், நாங்கள் ஒரு லிட்டருக்கு 5.2 முதல் 5.5 கி.மீ. தூரத்தை கட்டாயமாக பராமரிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

அதே போல, அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2017-18ம் ஆண்டில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு வரும் மொத்த வருவாயில் 51.4 சதவீதத் தொகையை தொழிலாளர்கள், ஊழியர்கள், அதிகாரிகளின் ஊதியத்துக்காகவும், 28.3 சதவீதத் தொகையை டீசல் மற்றும் பேருந்துகளை வாங்கவும் செலவிடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 21,500 பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம், 1.95 கோடி பயணிகள் பயணிக்கிறார்கள். இதில், பழைய டிக்கெட் கட்டணத்தின்படி தினமும் ரூ.25.3 கோடி வருவாய் கிடைக்கிறது.  அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு தற்போது ரூ.22,048 கோடி கடன் தொகை நிலுவையில் உள்ளது. 

அதே போல, புறநகர் பகுதிகளில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் 6,700 பேருந்துகள் மட்டுமே நட்டம் இல்லாமல், ஓரளவுக்கு லாபத்தில் இயக்கப்படுகின்றன. 

இது தவிர, சென்னையில் இயக்கப்படும் மாநகராட்சிப் பேருந்துகள் மற்றும் இதர நகரங்களில் இயக்கப்படும் பேருந்துகளும் பொதுமக்களின் சேவைக்காகவே இயக்கப்படுகின்றன. மலைப் பகுதிகளில் இயக்கப்படும் 580 பழைய பேருந்துகள் அனைத்தும் அதற்காக செலவிடும் 50 சதவீதத் தொகையைக் கூட வருவாயாக ஈட்டுவதில்லை.

போக்குவரத்துத் துறையில் நிபுணர்களாக விளங்குவோர் கூறுவது என்னவென்றால், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 6 ஆயிரம் பேருந்துகளாவது தேவைப்படுகிறது. சென்னையில் தற்போதிருக்கும் தேவையை ஈடுகட்ட சுமார் 2000 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட வேண்டும். இவ்வளவுக் குறைந்த பேருந்துகளை வைத்துக் கொண்டு அரசுப் போக்குவரத்துக் கழகம் லாபத்தை ஈட்ட முடியாது என்கிறார்கள்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே. ஹக்கிம் என்பவர்தான், சமீபத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தற்போதிருக்கும் கடன் தொகை குறித்த உண்மை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியுலகுக்குத் தெரியக் காரணமாக இருந்தவர்.

இவர் கூறுகையில், பேருந்து மற்றும் பேருந்துகளின் உபகரணங்களை வாங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. டிவிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்களில் பேருந்துகளின் உபகரணங்களை குறைந்த விலையில் வாங்கலாம். ஆனால், சின்ன சின்ன கடைகளில் இருந்து அதிக விலைக்கு பேருந்து உபகரணங்கள் வாங்கப்படுகின்றன. 

சுமார் 270 பணிமனைகளில் சராசரியாக 10 முதல் 15 ஊழியர்கள் 'இதர பணிகளில்' (other duty) இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் பலரும் வேலையே செய்யாமல் ஊதியம் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. அதிகளவிலான உயர் பதவிகள் இருக்கின்றன. அவற்றைக் குறைப்பதும் அவசியம் என்கிறார்.

எம்டிசி அரசுப் போக்குவரத்து ஊழியர்களின் சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறை. காவல்நிலையங்களோ, அரசு மருத்துவமனைகளோ லாபம் ஈட்ட வேண்டும் என்று யாரும் வலியுறுத்துவது இல்லை. பிறகு, அரசுப் போக்குவரத்துக் கழகம் மட்டும் லாபம் ஈட்ட வேண்டும் என்று சொல்வது ஏன்? என்று கேள்வி எழுப்புகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com