படிப்படியாகக் குறைந்து வரும் காவிரி நீர் வரத்து 

காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு கடந்த சில ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
படிப்படியாகக் குறைந்து வரும் காவிரி நீர் வரத்து 

தஞ்சாவூர்: காவிரியில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய நீரின் அளவு கடந்த சில ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைந்து வருகிறது.

 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. கர்நாடகம் வழங்க வேண்டும். குறிப்பாக, மேட்டூர் அணைத் திறப்புக் காலமான ஜூன் 12-ம் தேதி முதல் ஜன. 28-ம் தேதி வரை 182 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

இறுதித் தீர்ப்பில் வழங்கப்பட்ட அளவே மிகக் குறைவு என்ற அதிருப்தி நிலவும் நிலையில் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கர்நாடகம் வழங்குவதில்லை. இதையும் குறைத்து 102 டி.எம்.சி. மட்டுமே வழங்குவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது கர்நாடகம். ஆனால், நடைமுறையில் இறுதித் தீர்ப்புப்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் தண்ணீர் வழங்க மறுப்பதுடன், தனது திட்டத்தையும் வெளிப்படையாகவே செயல்படுத்தி வருகிறது.

 2017 - 18 ஆம் ஆண்டில் (ஜூன் முதல் ஜனவரி வரை) இதுவரை 112 டி.எம்.சி. மட்டுமே கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குக் கிடைத்துள்ளது. இதில், கர்நாடகத்தின் பிரதான நீர்த்தேக்கமான கிருஷ்ணராஜ சாகர் அணையில் கிடைத்த நீர் மிகவும் குறைவே. கடந்த தென் மேற்குப் பருவமழையின்போது பெங்களூருவில் அபரிமிதமாக பெய்த மழையால் கிடைத்த உபரி நீரும், தமிழக - கர்நாடக எல்லையில் பெய்த மழை நீரும்தான் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயருவதற்குக் காரணமாக இருந்தது.

 கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் 60.09 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே மேட்டூர் அணைக்கு வந்தது. கடந்த 25 ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த அளவு. இதேபோல, 2015 - 16 ஆம் ஆண்டிலும் மேட்டூர் அணைக்கு 95.6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே வந்தடைந்தது. 2014 - 15 ஆம் ஆண்டில் 199.16 டி.எம்.சி.-ம், 2013 - 14 ஆம் ஆண்டில் 226.57 டி.எம்.சி.-ம் வந்தாலும் கூட தென்மேற்குப் பருவத்தில் பெய்த அபரிமிதமான மழையால் கிடைத்த உபரி நீரே அதற்குக் காரணம். ஆனால், 2012 - 13 ஆம் ஆண்டில் 65.82 டி.எம்.சி. மட்டுமே வந்தது.

 இதனால், மேட்டூர் அணையில் இருந்து 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாகக் குறுவைப் பருவத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாத நிலை நிலவுகிறது. எனவே, டெல்டா மாவட்டங்களில் ஆறு ஆண்டுகளாக ஒரு போக சாகுபடி மட்டுமே மேற்கொள்ள முடிகிறது. இதிலும், 2012 - 13 மற்றும் 2016 - 17 ஆம் ஆண்டுகளில் காவிரி நீர் வரத்து இல்லாததாலும், வடகிழக்குப் பருவ மழை குறைந்ததாலும் சம்பா சாகுபடியும் பொய்த்தது.

 எனவே, டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் வரத்தை விட வடகிழக்குப் பருவ மழையை எதிர்நோக்கியே சம்பா சாகுபடியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழையிலும் இயல்பான அளவில் ஏறத்தாழ 20 சதம் குறைவாகவே பதிவானது.

 இதுபோல, ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாகத் தமிழகத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் தென் மேற்குப் பருவ மழையின்போது பெய்யக் கூடிய அபரிமிதமான மழை நீரைத் தேக்கி வைக்க முடியாமல் திறந்துவிடப்படும் உபரி நீர் மட்டுமே தமிழகத்துக்குக் கிடைத்து வருகிறது. பெரும்பாலான ஆண்டுகளில் கர்நாடகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென் மேற்குப் பருவ மழை உச்சகட்டத்தை எட்டும்போது மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைக்கிறது.
 இதுகுறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்தது:

 டெல்டா மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், 1970-களில் எழுந்த காவிரி பிரச்னையில் டெல்டா மாவட்டங்களில் குறுவையைக் கைவிடுமாறும், அதற்குப் பதிலாக தை - மாசி மாதங்களில் உளுந்து சாகுபடி செய்யுமாறும் கர்நாடகம் கூறியது. குறுவை மூலம்தான் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்கும் என தமிழ்நாடு தரப்பில் கூறி மறுப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், டெல்டா விவசாயிகள் தானாகவே குறுவையைக் கைவிடும் அளவுக்குக் கர்நாடகம் பழக்கப்படுத்தி வருகிறது.

கர்நாடகத்திடமிருந்து உறுதியாகத் தண்ணீர் வாங்கித் தரக்கூடிய அரசியல் தலைமை நமக்கு அமையவே இல்லை. இதனால், 6 ஆண்டுகளாகக் குறுவை சாகுபடி இல்லை. கர்நாடகம் தனது செயல் மூலம் குறுவையை மறக்கடிக்கச் செய்துவிட்டது.

அடுத்து ஒரு போகத்துக்கு வழங்குவதற்கும் எங்களிடம் தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறத் தொடங்கிவிட்டது. எனவே, மாதந்தோறும் தண்ணீர் வழங்க முடியாது என்றும், எப்போதெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ, அப்போது தருகிறோம் எனவும் கர்நாடகம் கூறியது. அவர்கள் கூறியதுபோலவே, உபரியாக தண்ணீர் வரும்போதும் அணை உடையும் அபாய நிலையிலும் மட்டுமே திறந்துவிடப்படுகிறது.

இதேபோல, நேரடி விதைப்பும், மாற்றுப் பயிர் சாகுபடியும் செய்யுமாறு கர்நாடகம் கூறியது. இவற்றை நமது அரசே வலியுறுத்தி வருகிறது. டெல்டா மண்ணுக்கு மாற்றுப் பயிர் ஏற்றதல்ல. என்றாலும், கர்நாடக அரசு தான் நினைத்ததைப் படிப்படியாகச் செயல்படுத்தி வருகிறது. இதுபற்றி தமிழகத்தில் ஆட்சியாளர்களும் அக்கறைப்படவில்லை. மத்திய அரசும் பாகுபாடு காட்டுகிறது. எனவே, நாம் போராடித்தான் காவிரியில் நமது உரிமையை நிலை நாட்ட வேண்டும் என்றார் மணியரசன்.

 1934 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் மேட்டூர் அணைக்கு ஆண்டு சராசரி நீர் வரத்து 368 டி.எம்.சி. ஆக இருந்தது. ஆனால், கர்நாடகத்தில் விதிமுறைகளை மீறி சிறு அணைகள், நூற்றுக்கணக்கான ஏரிகள் உருவாக்கப்பட்டுள்ளதால், 3 ஆண்டுகளாக நீர் வரத்து 99, 60, 112 டி.எம்.சி. எனக் குறைந்துவிட்டது.

 இந்நிலையில், கர்நாடகத்தில் உபரி நீரையும் தடுத்து தேக்குவதற்கு மேக்கேதாட்டு, ராசிமணலில் அணைகள் கட்டத் திட்டமிடப்பட்டு வருகிறது. இவை கட்டப்பட்டால் தமிழகத்துக்குக் கிடைத்து வரும் உபரி நீரும் தடைபடும்.
 இந்த நிலை தொடர்ந்தால் பாலாறு, பெண்ணையாறு வறண்டு பாலைவனமாக மாறிய நிலைமை காவிரியிலும் ஏற்படுமோ என்ற அச்சம் டெல்டா விவசாயிகள் மத்தியில் மேலோங்கியுள்ளது.
 -வி.என். ராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com