காவிரியில் கலக்கும் சாயக் கழிவுகள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் விதிகளை மீறி இயங்கும் சாயப் பட்டறைகள்சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதால்,
காவிரியில் கலக்கும் சாயக் கழிவுகள்! அதிர்ச்சியில் பொதுமக்கள்

குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதியில் விதிகளை மீறி இயங்கும் சாயப் பட்டறைகள்சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகளை நேரடியாக வெளியேற்றுவதால், சாக்கடைகளில் வெள்ளம்போல் கழிவுநீர் பல வண்ணங்களில் சென்று காவிரியில் கலந்து வருகிறது. இதனால், நகரில் பெரும்பாலான சாக்கடைகளில் ஓடும் கழிவுநீர் நாளொரு வண்ணமும், பொழுதொரு நிறமுமாகக் காட்சியளிக்கிறது.
 குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இதில், பெரும்பாலான பட்டறைகள் முறையான அனுமதி பெறாமல் இயங்கியதோடு, கழிவுகளைச் சுத்திகரிக்காமல் நேரடியாக சாக்கடைகளில் வெளியேற்றின. சாக்கடையில் வெளியேற்றப்படும் கழிவுகள் பெருக்கெடுத்தோடி காவிரியில் கலந்ததால், குடிநீரும் மாசடைந்து வந்தது. மேலும், பல பகுதிகளில் கழிவுநீரால் நிலத்தடி நீரின் நிறமும் மாறிப் போனது.
 சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்துக்கும் பெரும் சவாலாக உள்ள முறைகேடான சாயப் பட்டறைகளால் பொதுமக்கள் பல்வேறு உயிர்கொல்லி நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், விதிமீறிய பட்டறைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு துண்டிப்பு, சீல் வைத்தல், சிமென்ட் தொட்டிகளை இடித்தல், பொக்லைன் இயந்திரம் கொண்டு சாயப் பட்டறைகளைஅகற்றுதல் என பல்வேறு நடவடிக்கைகளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அவ்வப்போது மேற்கொண்டு வந்தது.
 ஒருபுறம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த போதிலும், சாயப் பட்டறைகள் சீலை உடைத்து இயக்குதல், மின்சார மோட்டாருக்குப் பதிலாக ஆயில் மோட்டாரைப் பயன்படுத்துதல், குழாய்களைத் தரைக்கடியில் பதித்து ரகசியமாக கழிவுகளை வெளியேற்றுதல் என பல்வேறு பகுதிகளில் பட்டறைகள் இயங்குவது தொடர்ந்து கொண்டே உள்ளது.
 மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதே நேரத்தில், குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் செயல்படும் சாய ஆலைகள் கழிவுகளை வெளியேற்றுவதால், பெரும்பாலான சாக்கடைகளுக்கு பல்வேறு வண்ணங்களில் சாயக் கழிவுகள் சென்று கலந்து வருகின்றன.
 நகரின் பிரதானமாக உள்ள கோம்புப்பள்ளம் ஓடை, எடப்பாடி சாலையில் சின்னப்பநாயக்கன்பாளையம், கேஓஎன் திரையரங்கு பகுதியில் சாக்கடைகள் என சாயக் கழிவுகளால் நிறம் மாறிக் காணப்படுகின்றன. கழிவுகள் கலந்த தண்ணீரைப் பயன்படுத்துவோருக்கு தோல் நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. கழிவுகள் கலந்த தண்ணீரைப் பாய்ச்சும் விவசாய நிலங்களில் மண்ணின் தன்மை மாறி விஷத்தன்மையடைகிறது.
 சுற்றுச் சூழலுக்கும், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, உயிரினங்களின் வாழ்வாதாரத்துக்கே சவால் விடும் வகையில் சாயக் கழிவுகளை சாக்கடைகளில் வெளியேற்றுவதோடு, நீர்நிலைகளை மாசுபடுத்தும் சாயப் பட்டறைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.
 - ராஜூ சாஸ்திரி
 நிறம் மாறிய பாறைகள்...
 கழிவுகள் ஆற்றில் சென்று கலப்பதால், காவிரி ஆற்றில் உள்ள பாறைகளும் நிறம் மாறியது பொதுமக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கழிவுகள் நேரடியாக வெளியேற்றப்பட்டால் தெரிந்துவிடும் என்பதற்காக கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டு, காஸ்டிக் சோடா மூட்டை மூட்டையாகக் கொட்டப்பட்டும், சாயக் கழிவுகளில் குளோரின் வாயு செலுத்தியும் நிறம் மாற்றப்பட்டு வெளியேற்றப்படுகிறது. இதுபோன்று காவிரியில் நிறம் மாற்றப்பட்ட சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து செல்வதால் பாறைகளில் சாம்பல்போன்று படிந்து வெண்மை நிறமாகக் காட்சியளிக்கின்றன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com