அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கான வசூல் படி அதிரடியாகக் குறைப்பு

அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வால் வசூல் அதிகரித்துள்ள நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படும் தினசரி வசூல் படிக்கான (கலெக்ஷன் படி) சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வால் வசூல் அதிகரித்துள்ள நிலையில், ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்கப்படும் தினசரி வசூல் படிக்கான (கலெக்ஷன் படி) சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வு கடந்த 20-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதன்படி, புறநகர் பேருந்துகளில், ரூ.25 முதல் ரூ.150 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு சராசரியாக 20 முதல் 50 சதவீதமாகும். கட்டண உயர்வு காரணமாக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வசூல் தொகையும் அதிகரித்துள்ளது. இதன் காரணாக, ஓட்டுநர்கள்-நடத்துநர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் தினசரி வசூல் படியும் உயர்ந்தது. இதனால், அவர்கள் மகிழ்ச்சியடைந்திருந்த நிலையில், வசூல் படியின் விகிதத்தை போக்குவரத்துக் கழகங்கள் அதிரடியாக குறைத்து அமல்படுத்தியுள்ளன.
இதுகுறித்து போக்குவரத்துத் தொழிலாளர் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகத்தில் சராசரியாக தினமும் ரூ.2 கோடி அளவில் இருந்த வசூல் தொகை, கட்டண உயர்வுக்குப் பிறகு கூடுதலாக ரூ.1 கோடி வரை கிடைக்கிறது.
குறிப்பாக, விழுப்புரம்-சென்னை வழித்தட பேருந்துகளில், தினமும் ரூ.20 ஆயிரம் பயணக் கட்டணம் வசூலாகி வந்த நிலையில், தற்போது ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வசூலாகிறது. இதே போல, விழுப்புரம், புதுவை, கடலூர் வழித்தடங்களிலும் முன்பு சராசரியாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் வரை வசூலான நிலையில், தற்போது ரூ.15 ஆயிரம் அளவில் உயர்ந்துள்ளது.இதனால், நடத்துநர், ஓட்டுநர்களுக்கான வசூல் படியும் உயர்ந்தது. ஆனால், வசூல்படியை குறைத்து போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு புறநகர் பேருந்துகளில் வசூல் படி ரூ.100-க்கு ரூ.1.25 பைசாவும், நகரப் பேருந்துகளில் ரூ.100-க்கு ரூ.2-ம் வசூல் படி வழங்கப்பட்டு வந்தது. சிறப்புப் பேருந்துகளை இயக்கினால் ரூ.1.50 பைசா என்றும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வசூல் படி புறநகர் பேருந்துகளில் ரூ.100-க்கு ரூ.1.25 லிருந்து 90 காசாகவும், நகரப் பேருந்துகளில் ரூ.2 லிருந்து ரூ.1.20 காசுகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களை பொருத்தவரை வசூல் படிதான் அவர்களுக்கு பிரதான வருவாய். ரூ.10 ஆயிரம் வசூலுக்கு, ரூ.400 முதல் ரூ.500 என்ற விகிதத்தில் படி இருக்கும். தினசரி மொத்த வசூல் தொகையைப் பொருத்து வசூல் படி இருக்கும் என்பதால், அவர்களுக்கும், 
குறிப்பிட்ட அளவுக்கு படியை குறைத்து வழங்கப்படுவதாக தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com