சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க அரசு முடிவு?

சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்குவது என சென்னையில் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க அரசு முடிவு?

சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்குவது என சென்னையில் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் திங்கள்கிழமை நடத்திய திடீர் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை இரவு பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த புதிய கட்டணம் சனிக்கிழமை முதல் உடனடியாக அமலுக்கு வந்தது. உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஏழை, எளிய, நடுத்தர பிரிவினர் பெரும் பாதிப்புக்குள்ளாவதாகவும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுப் பேருந்துகளின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற இயலாது. தவிர்க்க முடியாத சூழலில் இக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொதுமக்களிடம் தாம் பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருந்தார்.
சென்னை பசுமைச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், போக்குவரத்துக் கழக உயரதிகாரிகளுடன் திங்கள்கிழமை காலை திடீர் ஆலோசனை மேற்கொண்டார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், புதிய கட்டண உயர்வை அடுத்து கடந்த இரு தினங்களில் பொதுமக்கள் சந்தித்து வரும் பிரச்னைகள், போக்குவரத்துக் கழக ஊழியர்கள், குறிப்பாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் சந்தித்து வரும் சவால்கள், நடைமுறைச் சிக்கல்கள், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாதாந்திர பயணச் சீட்டு உள்ளிட்ட பஸ் பாஸ் நடைமுறைகளில் புதிய கட்டணம் நிர்ணயிப்பது குறித்தும், உயர்த்தப்பட்ட புதிய கட்டணத்தால் எத்தகைய பாதிப்பை பொதுமக்கள் சந்தித்து வருவதாக கூறுகின்றனர் என்பதையும் அதிகாரிகளிடம், அமைச்சர் கேட்டறிந்ததாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணக் கட்டணப் பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஒருசில தினங்களில் வெளிவரும் என்று தெரிகிறது.
இது தொடர்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறியது: ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க அதிகாரிகளை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பயணிகளிடம் தரக்குறைவாக நடந்துகொண்டால் உரிய நடவடிக்கை எடுக்கவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஆலோசனைக் கூட்டம் மீண்டும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
2000 புதிய பேருந்துகள்
தனியார் பேருந்துகளுக்கு இணையாக 2 ஆயிரம் புதிய பேருந்துகளை மே மாதத்துக்குள் வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்கட்டமாக, படுக்கை வசதியுடன் கூடிய 40 பேருந்துகள், கழிப்பறை வசதியுடன் கூடிய 20 பேருந்துகள் உள்ளிட்ட 2 ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. படுக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசுப் பேருந்துகள் மே மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும். இது தவிர பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகளை மத்திய அரசு பங்களிப்புடன் வாங்குவதற்கான இறுதிக் கட்டப் பணிகளும் நடந்து வருகின்றன என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com