பாதை தெரியாமல் பயணம் தடைப்படும்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் கருத்து

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்து, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதை தெரியாமல் பயணம் தடைப்படும்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் கருத்து


சென்னை: நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் பிரவேசம் குறித்து, தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில்,  அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ. அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சுயமரியாதையையும், சமூகநீதியையும் இரு சிறகுகளாகக் கொண்ட திராவிட இயக்கம் என்பது, நூறாண்டு கடந்தும் ஓய்வின்றிச் சிறடிகத்துக் கொண்டே உயரே உயரே பறந்துகொண்டுதான் இருக்கிறது. தாய்ப்பறவை தன் குஞ்சுகளுக்கு இரைதேடி வெகுதூரம் பறந்து சென்று, இரையுடன் திரும்பி வந்து வாஞ்சையுடன் ஊட்டுவது போல, தமிழக மக்களுக்கு உண(ர்)வூட்டும் இயக்கமாக, திராவிட அரசியல் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் சிறகடித்துக் கொண்டே இருக்கிறது.

ஆட்சியில் இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவும், இன - மொழி பாதுகாப்புக்காகவும் உறுதியுடன் பாடுபடும் இயக்கமான தி.மு.கழகத்தின் ஆற்றல் அளவிடற்கரியது. தமிழகத்தை இந்திய துணைக்கண்டத்தின் முன்னோடி மாநிலமாக மாற்றிக்காட்டிய பேரறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வழியில், கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு கிஞ்சிற்றும் தவறாமல், கழகத்தை அதே வலிவோடும் பொலிவோடும் வீறுநடை போட்டு வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும் பொறுப்பினை நாம் அனைவரும் சமமாகப் பங்கிட்டுக்கொண்டு, அதை நிறைவேற்றிட உடல் -  பொருள் - ஆவி அனைத்தையும் பரிமாறிடச் சித்தமாயிருக்கிறோம்.

"எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கியே” என்பதைப்போல, எல்லாருடைய கண்ணும் - கருத்தும் நம்மை நோக்கியே இருக்கின்றன.

நமக்கான பாதை நீண்டதாயினும், மிகவும் தெளிவானது. ஜனநாயக நெறி அடர்ந்தது. அதில் கற்களும் முட்களும் தடை ஏற்படுத்தும்போது, அவற்றை அகற்றியெறிய வேண்டிய மராமத்துப் பணியை நாம் மேற்கொண்டாக வேண்டும். அதற்காகவே, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் களஆய்வு திட்டமிடப்பட்டு, தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள ஆய்வின் மீது நீங்கள் அளிக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com