மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து எட்வின்ஜோ பதவியிறக்கம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து எட்வின்ஜோ பதவியிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து எட்வின்ஜோ பதவியிறக்கம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் இருந்து எட்வின்ஜோ பதவியிறக்கம் செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
சென்னை மருத்துவக் கல்லூரி டீனாக இருந்த ஆர்.விமலா ஓய்வு பெற்றதையடுத்து கோவை அரசு மருத்துவமனை டீனாக இருந்த மருத்துவர் எட்வின்ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராக 2017 ஏப்ரலில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தை ரத்து செய்து அனைத்து தகுதிகளும் உள்ள தன்னை இயக்குநராக நியமிக்கக்கோரி கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டீன் எஸ்.ரேவதி கயிலை ராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, ரேவதி கயிலைராஜனை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் எட்வின்ஜோ மருத்துவக் கல்வி இயக்குநராகத் தொடர இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவக் கல்வி இயக்குநராக எட்வின்ஜோ நியமிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையையும் மருத்துவக் கல்வி இயக்குநர் பணி மூப்பு பட்டியல் தொடர்பான அரசாணையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், ரேவதி கயிலைராஜனை மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்க வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததோடு, தகுதியான நபரை நியமனம் செய்வது தொடர்பாக மாநில சுகாதாரத்துறைச் செயலர் 6 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது வரை எட்வின்ஜோ மருத்துவக் கல்வி இயக்குநர் பொறுப்பில் உள்ளார். நீதிமன்றம் அவரது நியமனத்தை ரத்து செய்த நிலையில் எதன் அடிப்படையில் அவர் பொறுப்பைத் தொடர்கிறார் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என்று ரேவதி கயிலைராஜன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வாதிடுகையில், தற்போது எட்வின்ஜோ அந்தப் பதவியில் இல்லை எனக்கூறி அதுதொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த ஆவணத்தின் ஒரு பகுதியில் அவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டதாகவும், மறு பகுதியில் அவரே தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நீதிபதி, 
தவறான தகவல்களைத் தெரிவித்து நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துகிறீர்கள் எனக் குறிப்பிட்டு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு பிறகு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் பணியிடம் காலியாக உள்ளதாகவும், அப்பொறுப்பில் இருந்த எட்வின்ஜோ பதவியிறக்கம் செய்யப்பட்டு மருத்துவக் கல்லூரி டீனாகவே இருப்பதாகவும் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அரசு வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com