மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்: ஆளுநர் அறிவுறுத்தல்

மருத்துவமனையை அதிகாரிகள் வரும்போது மட்டுமின்றி, எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
வேலூர் பென்லெண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 
வேலூர் பென்லெண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 

மருத்துவமனையை அதிகாரிகள் வரும்போது மட்டுமின்றி, எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார். 
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 2-ஆம் நாளாக திங்கள்கிழமையும் வேலூரில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 
அதன்படி, காட்பாடி, காந்திநகரிலுள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்ட மையத்துக்கு திங்கள்கிழமை காலை சென்ற அவர், அங்கு குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கும் பணியைப் பார்வையிட்டார். பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்ட மையத்தையும் பார்வையிட்டதுடன், துப்புரவுப் பணியாளர்களுடன் இணைந்து தூய்மை பாரதத் திட்ட உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். மேலும், தூய்மைப் பாரத திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர், அண்ணா சாலையிலுள்ள பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனைக்குச் சென்ற ஆளுநர், அங்கு மருத்துவமனையின் வளாகத்தை துடைப்பம் கொண்டு சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அவருடன் இணைந்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பி.பகலவன், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மின், தலைமை மருத்துவ அலுவலர் ஜெயந்தி உள்ளிட்டோரும் தூய்மைப் பணியை மேற்கொண்டனர். 
தொடர்ந்து, தூய்மை பாரத திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆளுநர், கழிப்பறை கட்டுவதன் அவசியம் தொடர்பாக நகர்ப்புற செவிலியர்கள் நடத்திய விழிப்புணர்வு நாடகத்தை கண்டு ரசித்தார். மேலும், மருத்துவமனையை அதிகாரிகள் வரும்போது மட்டுமின்றி, எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 
இதையடுத்து, சுற்றுலா மாளிகைக்குச் சென்ற ஆளுநர், வேலூர் மாவட்டம் குறித்தும், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்தும் விடியோ காட்சி மூலமாக விளக்கத் தொகுப்பை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக, தமிழக ஆளுநரை தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் நீலோபர் கபில் ஆகியோர் சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து தமிழக ஆளுநர், மனுக்களை பெற்றுக் கொண்டார். மாலையில் வேலூர் கோட்டையை ஆளுநர் பார்வையிட்டார்.ஆளுநரின் வருகையையொட்டி, வேலூர் மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com