மாவட்ட வாரியாக திமுக செயல்பாடுகள்: பிப்.1 முதல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுகவைப் பலப்படுத்தும் வகையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சந்தித்து ஆலோசனை
மாவட்ட வாரியாக திமுக செயல்பாடுகள்: பிப்.1 முதல் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திமுகவைப் பலப்படுத்தும் வகையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் உள்பட அனைத்து நிர்வாகிகளையும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். மொத்தம் 32 நாள்களில் அமைப்பு ரீதியாக திமுகவின் 65 மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். வரும் மார்ச் 22 ஆம் தேதி வரை இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
கட்சிப் பணி தொடர்பாக, மாவட்ட வாரியாக ஊராட்சி செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர் வரையுள்ள நிர்வாகிகள் அனைவரையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார். அனைத்து துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். கட்சிப் பணிகளை செம்மைப்படுத்த நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் எனவும் அன்பழகன் கூறியுள்ளார்.
சந்திப்பு ஏன்?: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் திமுக தலைவர் கருணாநிதி அரசியல் பணிகளில் ஈடுபடாத நிலையில், தமிழக அரசியல் சூழல் முற்றிலும் மாறிப்போய் உள்ளது. 
நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தனிக் கட்சி தொடங்கி தேர்தலைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தச் சூழலில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சியினரைத் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் கட்சியைப் பலப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எழுச்சிப் பயணம்: ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் என்று அறிவிக்கத் தொடங்கிய நேரத்தில் , மு.க.ஸ்டாலின் எழுச்சிப் பயணம் என்ற பெயரில் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்காக தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வதாக அறிவித்திருந்தார். அப்போது, மாவட்ட வாரியாக நிர்வாகிகளையும் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், வடகிழக்கு பருவமழையின் காரணமாக அந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதனால், நிர்வாகிகள் அனைவரையும் அறிவாலயத்துக்கு அழைத்து மு.க.ஸ்டாலின் ஆலோசிக்க உள்ளார்.
உள்கட்சிப் பூசல்: மேலும், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுக்கு இடையே உள்கட்சி பூசல் உள்ளது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் மாவட்டச் செயலாளராக சுகவனம் நீக்கப்பட்டு, செங்குட்டுவன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைப்போல, அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே உள்ள பூசலைக் களைவதற்காகவும் இந்தச் சந்திப்பை ஸ்டாலின் நடத்த உள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலுக்குத் தயாராவதற்கும் நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவுகள் பிறப்பிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com