மீண்டும் நீட் தேர்வு: தலைவர்கள் கண்டனம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நீட் தேர்வு நடைபெற உள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்,
மீண்டும் நீட் தேர்வு: தலைவர்கள் கண்டனம்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நீட் தேர்வு நடைபெற உள்ளதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அன்புமணி: 2018-2019-ஆம் ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுகள் மே 6-ஆம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அந்தத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 
மாறாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப் போவதாக அறிவித்து, அதை அரைகுறையாகத் தொடங்கியிருப்பதன் மூலம் நீட் தேர்வை எழுதியே தீர வேண்டும் என்ற நிலையை அரசு ஏற்படுத்தியுள்ளது. அனைத்து ஒன்றியங்களிலும் நீட் பயிற்சி மையங்களை அமைப்பதாக அறிவித்து அதை இன்னும் செயல்படுத்தாதது, நேரடியாக பயிற்சி அளிப்பதற்கு பதிலாக வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிப்பது என மாணவர்களுக்கு அடுத்தடுத்து தமிழக அரசு துரோகம் செய்து வருகிறது. 
வசதி படைத்த மாணவர்கள் குறைந்தது இரு ஆண்டுகள் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறுகிறார்கள். ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மாதங்கள் கூட பயிற்சி கிடைக்காத நிலையில், அவர்களால் நீட் தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெற முடியும்? தமிழக அரசு அதன் பொறுப்பற்ற செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை சிதைத்து சின்னாப்பின்னமாக்கியுள்ளது. 
ஜி.கே.வாசன்: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நீட் தேர்வை நடத்தினால் பிற பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு மிக மிகக் கடினம் என்பதை மத்திய அரசு ஏன் உணரவில்லை. இதனை தமிழக அரசும் கண்டும் காணாமல் உள்ளது. 
கிராமப்புற மற்றும் நகர்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு தடையாக இருப்பதால் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும். இல்லையென்றால் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் நீட் வினாக்கள் இடம்பெற வேண்டும். மாநிலப் பாடத்திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களின் நலன் காக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கி.வீரமணி: இந்தியா முழுவதும் மாநில பாடத் திட்ட மாணவர்களை மனதில் கொண்டு மாநில பாடத் திட்டத்திலிருந்து நீட் தேர்வு கேள்வித் தாள்களை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். ஆனால் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் படியே கேள்வித்தாள் தயாரிக்கப்படும் என்று மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி இயற்றப்பட்ட தமிழக அரசின் இரு சட்டங்கள் என்னவாயிற்று? அரசியல் மாச்சரியங்களையெல்லாம் ஒரு நொடியில் தூக்கி எறிந்து விட்டு, ஒத்த கருத்துள்ளோர் அனைவரும் ஓரணியில் பொங்கி எழுந்து இதற்கொரு முடிவைக் காண வேண்டியது காலத்தின் கட்டாயம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com