ஹிந்து மதத்துக்கும் தமிழ்மொழிக்கும் எந்த விரோதமும் இல்லை: விஜயேந்திரர் விவகாரத்தில் தமிழிசை 'புது'   விளக்கம்! 

விஜயேந்திரர் விவகாரத்தில் ஹிந்து மதத்துக்கும் தமிழ்மொழிக்கும் சண்டை உண்டாக்கப் பார்க்கிறார்கள்; அப்படி எந்த விரோதமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை விளக்கம் தெரிவித்துள்ளார்
ஹிந்து மதத்துக்கும் தமிழ்மொழிக்கும் எந்த விரோதமும் இல்லை: விஜயேந்திரர் விவகாரத்தில் தமிழிசை 'புது'   விளக்கம்! 

சென்னை: விஜயேந்திரர் விவகாரத்தில் ஹிந்து மதத்துக்கும் தமிழ்மொழிக்கும் சண்டை உண்டாக்கப் பார்க்கிறார்கள்; அப்படி எந்த விரோதமும் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை விளக்கம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்ஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட காஞ்சி பீடாதிபதிகளில் ஒருவரான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது அமர்ந்திருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. இதன் மூலம் தமிழ்த்தாயை விஜயேந்திரர் அவமதித்து விட்டதாக அரசியல் தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனது தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காமல் விஜயேந்திரர் உதாசீனப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததாக கூறி அவர் மீது காவல்நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.  புதனன்று  இந்த விவகாரம் குறித்து கருத்துக் கேட்கப்பட்ட பொழுது, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை பதிலளிக்க மறுத்த்து விட்டார்.

இந்நிலையில் வியாழன் அன்று மருத்துவமனை நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழிசையிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து மீண்டும் கேட்டனர். அபபோழுது அவர் கூறியதாவது:

இந்த விவகாரம் குறித்து சங்கரமடம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்த பொழுது அதனைக் கடவுள் வாழ்த்தாக எண்ணி விஜயேந்திரர் தியானத்தில் ஈடுபட்டிருந்தார் என்று தெரிவித்துள்ளார்கள். தமிழ்மொழியினை அவமானப்படுத்துவதற்கான நோக்கம் அவருக்குக் கிடையாது.

ஆனால் சிலர் இந்த விவகாரத்தினை ஆண்டாள் பற்றிய வைரமுத்துவின் கருத்துடன் ஒப்பிடுவது சரியல்ல; அதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதேபோல் வேறு சிலர் விஜயேந்திரர் விவகாரத்தில் ஏதோ ஹிந்து மதத்துக்கும் தமிழ்மொழிக்கும் சண்டை என்பது போல தோற்றத்தினை உண்டாக்கப் பார்க்கிறார்கள்; அப்படி எதுவும் கிடையாது. எந்த விரோதமும் இல்லை.  அவர்கள்தான் என்னவோ தமிழ்க்காவலர்கள் போல செயல்படுகிறார்கள்.

இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com