திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்

திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன்(52) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன் காலமானார்

திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அலமேலு நடராஜன்(52) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை காலமானார்.
உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை வழக்கில் 6 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி அலமேலு நடராஜன் கடந்த திங்கள்கிழமை இரவு கடுமையான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவால் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு உயர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். 
வழக்குகளில் மனிதாபிமானத்துடனும், சட்டத்தின்படியும் தீர்ப்பு வழங்குவதில் வல்லவர் என்று பரவலாகப் பெயரெடுத்த அலமேலு நடராஜனின் சொந்த ஊர் கோவை மாவட்டம், போத்தனூர் ஆகும். திருச்சி செயின்ட் ஜோசப் பள்ளியில் பள்ளிப் படிப்பும், திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்ற இவர், 1991 -ஆம் ஆண்டில் நீதித்துறை மாஜிஸ்திரேட்டாக பதவியேற்றார். பிறகு கோவை மற்றும் வேலூர் மாவட்டங்களில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றியிருக்கிறார். திருப்பூரில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியாக 2015-ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். 
இதைத் தொடர்ந்து 2016 மார்ச் மாதம் நிகழ்ந்த சங்கர் படுகொலையின் வழக்கை திருப்பூர் வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேர்மையான முறையில் விசாரித்து, தீர்ப்பு வழங்கி அனைவரின் பாராட்டுகளையும் பெற்ற அலமேலு நடராஜனின் திடீர் மரணம் நீதித்துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும் என நீதித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கோவை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நீதியரசர் அலமேலு நடராஜன் உடலுக்கு அரசுத் துறையினர், நீதித்துறையினர், காவல் துறையினர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் மதியம் 2.30 மணிக்கு சென்னை கொண்டு செல்லப்பட்டது. சென்னை, அண்ணா நகர் மேற்குப் பகுதியில் உள்ள கலெக்டர் நகர் செரியன் மருத்துவமனை அருகில் உள்ள கிரீன் பீல்டு அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் வில்லிவாக்கம் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும். தொடர்புக்கு: 9566794472.
இந்திய கம்யூனிஸ்ட் இரங்கல்: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: உடுமலை சங்கர் படுகொலை வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன், மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
சாதி வெறிக்கு எச்சரிக்கை செய்தும், சமூக நீதிக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலும் அவர் வழங்கிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com