பதிலளிக்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம்:ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிகள் நிறுத்தி வைப்பு! 

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை தாக்கலான வாக்குமூலங்களை படித்துப் பார்க்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, விசாரணை ஆணையப் பணிகள் 15 நாட்களுக்கு நிறுத்தி.. 
பதிலளிக்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம்:ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிகள் நிறுத்தி வைப்பு! 

சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை தாக்கலான வாக்குமூலங்களை படித்துப் பார்க்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, விசாரணை ஆணையப் பணிகள் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றினை தமிழக அரசு ஏற்படுத்தி உத்தரவிட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக், அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட 22 பேர் இதுவரை வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அப்பொழுது இது தொடர்பாக விசாரிக்க சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆணையம் அனைவரையும் முதலில் விசாரித்து முடிக்கட்டும். பின்னர் எங்கள் தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுங்கள். சசிகலா தரப்புக்கு எதிராக வாக்குமூலங்களில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ, அதற்கு மொத்தமாக விளக்கமளிக்கிறோம் என்று தெரிவி த்தார்.

செவ்வாயன்று விசாரணை ஆணையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த வெங்கட்ரமணன் ஆஜராகி, இரண்டு மணி நேரங்கள் விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து இதுவரை அளிக்கப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் தொகுத்து சசிகலா தரப்புக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு இவற்றை பதிவுத்தபால் மூலம் அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    

இதே போன்ற கோரிக்கையினை முன்வைத்த அப்பல்லோ மருத்துவமனை தரப்புக்கும் ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்த்து பதிலளிக்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிகள் 15 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் ஆணையம் பிப்ரவரி 12-ஆம் தேதி தனது பணிகளைத் துவங்க உள்ளது. அன்று ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் ஐயப்பன் விசாரிக்கப்பட உள்ளார். அதற்குப் பிறகு இரு நாட்கள் கழித்து சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணைக்கு தயாராவார்கள் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com