நெல் அறுவடை இயந்திரம் கிடைக்காததால் விவசாயிகள் அவதி!

கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நெல் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள பெல்ட் வடிவமைப்பு இயந்திரம்.
நெல் அறுவடைப் பணியில் ஈடுபட்டுள்ள பெல்ட் வடிவமைப்பு இயந்திரம்.

கடலூர் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் 1.10 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும், டெல்டா அல்லாத பாசனப் பகுதிகளில் ஏரிகள், ஆழ்துளை குழாய்க் கிணறுகளின் மூலம் 1.40 லட்சம் ஏக்கர் பரப்பளவிலும் சம்பா பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
சாகுபடி செய்யப்பட்ட விளைநிலங்களில் தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. ஆனால், அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாடு காரணமாக இந்தப் பணி தடைப்பட்டுள்ளது.
அறுவடைக்குத் தேவையான தனியார் இயந்திரங்களை விழுப்புரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து இடைத் தரகர்கள் மூலமாக வரவழைத்து அறுவடை செய்வது வழக்கம்.
கடலூர் மாவட்ட விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, தமிழக அரசு வேளாண் பொறியியல் துறை, சிதம்பரம் உதவி வேளாண் பொறியியல் துறை மூலம் பெல்ட் வடிவமைப்பு கொண்ட இயந்திரத்தையும், கடலூர் உதவி வேளாண் பொறியியல் துறை கட்டுப்பாட்டில் டயர் வடிவமைப்பு கொண்ட இயந்திரம் இரண்டையும் கொள்முதல் செய்து, அந்த மூன்று அறுவடை இயந்திரங்கள் மூலம் அரசு நிர்ணயித்த குறைந்த வாடகைக்கு அறுவடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் ஏ.பி.ரவீந்திரன் கூறியதாவது:
வேளாண் பொறியியல் துறை மூலம் இயக்கப்படும் பெல்ட் அறுவடை இயந்திரத்துக்கு ரூ. 1140-ம், டயர் வடிவமைப்பு இயந்திரத்துக்கு ரூ. 850-ம் வசூலிக்கிறார்கள். ஆனால், இடைத் தரகர்கள் மூலம் இயக்கப்படும் பெல்ட் இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,800-ம், டயர் இயந்திரத்துக்கு ரூ. 1,650 -ம் வசூலிக்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு ஏற்படும் கூடுதல் செலவுகளைத் தடுக்கும் பொருட்டு, மாவட்டத்தில் சொந்தமாக அறுவடை இயந்திரம் வாங்க முன்வரும் விவசாயிகளுக்கு கூடுதல் எண்ணிக்கையில் மானியம் வழங்கப்பட்டது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு வரை 24 அறுவடை இயந்திரங்களும் வாங்கப்பட்டன. எனினும், மானியத்தில் வாங்கப்பட்ட தனியார் அறுவடை இயந்திரங்களும் வெளி மாவட்ட அறுவடை இயந்திரங்களின் அறுவடைத் தொகையையே வசூலிக்கிறார்கள்.
மாநில அளவில் நெல் சாகுபடி அதிகளவில் செய்யப்படும் மாவட்டங்களில் தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை மூலம் தேவைக்கேற்ப இயந்திரங்கள் வாங்கப்பட்டு, அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படும் செலவுகளைக் குறைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. எனினும், இந்த நடைமுறை தற்போது மாற்றப்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு அறுவடை இயந்திரங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.
நெல் அறுவடைக்கு முன்பாக ஊடு பயிராக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து அறுவடையின் போது, நெல் பயிர் சேதமாகாமல் இருக்க பெரும்பாலான விவசாயிகள் பெல்ட் அறுவடை இயந்திரத்தை விரும்புவர். கடந்த காலங்களில் அறுவடை இயந்திரத்தின் தேவை கருதி, மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு அறுவடை இயந்திரங்களை வரவழைத்து, குறைந்த வாடகையில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மாவட்ட நிர்வாகமே இதற்கு ஏற்பாடு செய்யும்.
ஆனால், தற்போது அறுவடைப் பணி தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இயங்கி வந்த அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் நிரந்தரமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு தலா பத்து இயந்திரங்கள் வீதம் ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.
இதனால், இடைத் தரகர்கள் மூலமாக இயக்கப்படும் அறுவடை இயந்திரங்களைக் கூடுதல் வாடகை கொடுத்து அறுவடை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அரசு இயந்திரங்களும் இல்லை. தனியார் இயந்திரங்களின் கூடுதல் கட்டணம். இவற்றின் காரணமாக அறுவடைப் பணி மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நெல் வியாபாரிகளே சொந்தமாக அறுவடை இயந்திரத்தைக் கொண்டு வந்து, அறுவடை செய்து நெல்லையும் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்வதால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் நெல் சாகுபடி பரப்பளவுக்கு ஏற்ப விவசாயிகளின் நலன் கருதி, அறுவடை இயந்திரங்களை வழங்கி குறைந்த வாடகைக்கு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தனியார் அறுவடை இயந்திர உரிமையாளர்களுடன் பேசி, வாடகையைக் குறைத்து அறுவடைப் பணி முழுமையடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் பி.ரவீந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com