தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது?: அரசுக்கு உயர்நீதி மன்றம் கேள்வி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஏன் உத்தரவிடக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இதே போன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ விசாரணை கோரி சீமான் தொடர்ந்த வழக்கில் தமிழக காவல்துறை டிஜிபி சார்பில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முரளி ரம்பா பதில் மனு தாக்கல் செய்தார். அந்தப் பதில் மனுவில், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயத்தின் முன் கடந்த மே 22-ஆம் தேதி திரண்ட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கூட்டத்தை கலைக்க எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தது. இந்த நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஊழியர்கள் குடியிருப்புக்கு சிலர் தீ வைத்தனர். இதனால் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை பத்திரமாக மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தின் அப்போதைய காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் காயமடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தலைமை நீதிபதி, இந்தச் சம்பவம் தொடர்பாக ஏன் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார். அப்போது, அரசு வழக்குரைஞர் டி.என்.ராஜகோபாலன், இது குறித்து விரிவான பதில் மனு மற்றும் விடியோ ஆதாரங்களைத் தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.மேலும், சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை சரியான கோணத்தில் நடந்து வருவதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றார்.
அப்போது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும் உயர்நீதிமன்றத் கிளையில் உள்ள வழக்குகளை சென்னைக்கு மாற்றத் தேவையில்லை என்றும், போலீஸார் குறித்த பொதுவான குற்றச்சாட்டுகளில் தலையிட முடியாது. 
அதே வேளையில் அத்துமீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com