நீட் தேர்வு விவகாரத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் சிபிஎஸ்இ: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் 

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக மதுரை உயர் நீதிமன்ற கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் சர்வாதிகாரப் போக்குடன் செயல்படும் சிபிஎஸ்இ: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் 

மதுரை: நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுவதாக மதுரை உயர் நீதிமன்ற கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் குளறுபடிகள் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த  கருத்தை தெரிவித்துள்ளது.

அவர் தமது மனுவில், கடந்த மே மாதம் 6 - ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தமிழில் மொழிமாற்றம் செய்த வினாத்தாளில் இயற்பியல் பாடத்தில் 10 வினாக்கள், வேதியியலில் 6, உயிரியலில் 33 என 49 வினாக்கள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தன. இதனால், தமிழ் வழியில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு தவறாகக் கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், மொழிபெயர்ப்பில் என்ன நடைமுறைகள் பின்பற்றப்பட்டன? வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகளைக் கண்டறிந்து அவற்றைப் பயன்படுத்த என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? மொழிபெயர்ப்பின்போது அதற்குரிய அகராதியைக் கொண்டு வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டனவா? அப்படியென்றால் இந்த தகவல்கள் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கும், அவர்களைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க அறிவுரையாக வழங்கப்படுகிறதா? என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு சிபிஎஸ்இ பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 6 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதன்படி இந்த வழக்கானது வெள்ளியன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசுத் தரப்பு தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ மனுவினை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் கூறியதாவது: 

நீட் தேர்வு விவகாரத்தில் சிபிஎஸ்இ சர்வாதிகாரப் போக்குடன் செயல்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒரே ஒரு மாநிலத்திலிருந்து (பிகார்) அதிக அளவில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com