தமிழகத்தில் தாமரையை மலர வைக்குமா அமித்ஷா வியூகம்? நாளை சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை சென்னை வருகிறார்.
தமிழகத்தில் தாமரையை மலர வைக்குமா அமித்ஷா வியூகம்? நாளை சென்னை வருகை

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திங்கள்கிழமை சென்னை வருகிறார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கியுள்ளார். இதற்காக அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த பணிகளுக்காக ஐந்து வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவை சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திரங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் வரும் அவர், இந்த சக்தி கேந்திரம் மற்றும் மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களையும் மாநில தேர்தல் கமிட்டி உறுப்பினர்களையும் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பொறுப்பாளரும், பாஜக தேசிய பொதுச்செயலாளருமான முரளிதரராவ், தேசிய செயலாளா் குபேந்திர யாதவ், மத்திய இணையமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில தலைவர்கள் தமிழிசை ஆகியோர் வரவேற்கின்றனா். அங்கிருந்து தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் இல்லத்துக்குச் செல்லும் அவர், சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள தங்க கடற்கரை அரங்கில் பகல் 12 மணியளவில் நடைபெறும் தோ்தல் முன் தயாரிப்புக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 3 மணியில் இருந்து 4 மணி வரை சங்க் பரிவார் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது குறித்து விவாதிக்கிறார். தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தலை சந்திப்பது குறித்து 14 ஆயிரம் சக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும், 3 ஆயிரம் மகாசக்தி கேந்திர பொறுப்பாளர்களிடமும் விவாதிக்க உள்ளார். 

இந்த நிகழ்ச்சியின் போது கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. இரவு 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்தும், புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் வியூகம் வகுப்பது குறித்தும் அந்த மாநில பாஜக நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்துகிறார். தொடா்ந்து இரவு 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை அந்தமான் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடக்க உளளது. 

பின்னர் இரவு தரமணியில் உள்ள சிஎஸ்ஐஆர் விருந்தினர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் (10 ஆம் தேதி) காலை தில்லி புறப்பட்டு செல்கிறார். 

அமித்ஷா கடந்த ஆண்டு மே 10,11 தேதிகளில் சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்டு 22, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் சென்னை, கோவைக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட பயணமும் ரத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com