மீன்களைப் பதப்படுத்தும் ரசாயனங்களால் உடல்நலக்கேடு?: பீதி தேவையில்லை என மீனவ அமைப்புகள் தகவல்

சென்னையில் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் உடல்நலக் கேடு ஏற்படுகிறது என்ற தகவல் மீன் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை, காசிமேட்டில் விற்பனைக்கு காத்திருக்கும் மீன்கள்.
சென்னை, காசிமேட்டில் விற்பனைக்கு காத்திருக்கும் மீன்கள்.

சென்னையில் மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்களால் உடல்நலக் கேடு ஏற்படுகிறது என்ற தகவல் மீன் பிரியர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மீன் விற்பனை கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மீன்கள் கெடாமல் இருப்பதற்காக பாமோலின்' ரசாயனம் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது உடல்நலத்துக்கு தீங்கானது என்ற தகவலும் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், கேரளம் செல்லும் மீன்கள் ஐஸ் கலந்து பெட்டிகளில் நிரப்பப்பட்டு பிறகு அதன்மேல் சோடியம் பென்சோயெட், பார்மோலின் போன்ற ரசாயனங்கள் தூவப்பட்டு எடுத்துச் செல்லப்படுகின்றன எனவும் புகார்கள் எழுந்துள்ளன. 
இத்தகைய ரசாயனங்கள் தூவப்படுவதால் ஐஸ் கட்டிகள் கரையும்போது தானாகவே மீன்களில் கலந்து விடுகின்றன. இதனால்தான் மீன்கள் கெட்டுப் போகாமல் புதிதாக இருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
உடல்நலப் பாதிப்புகள் என்ன?: இத்தகைய ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட மீன்களை உண்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
புற்றுநோய், பர்க்கின்ஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கும் அபாயமும் உள்ளதாகவும், சிலருக்கு தோல் நோய்கள், ஒவ்வாமை போன்றவை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.
மீனவர்கள் மறுப்பு: இந்நிலையில், சென்னையில் இத்தகைய ரசாயன பயன்பாடு முற்றிலும் இல்லை. அதனால் பொதுமக்கள் அச்சமின்றி மீன்களை வாங்கி சாப்பிடலாம் என்று மீனவ அமைப்புகள் உறுதியாக கூறுகின்றன.
ஐஸ் கட்டிகளே போதுமானவை: இது குறித்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் டி.குப்பன் மற்றும் சென்னை விசைப்படகு மீனவர்கள் நல சங்கத் தலைவர் கபிலன் ஆகியோர் கூறியது:
விசைப் படகுகளின் மூலம் ஒரு வாரம் வரை கடலில் தங்கி மீன்பிடித்து வருகிறோம். அப்போது தினமும் சேகரிக்கப்படும் மீன்கள் ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட பெரிய தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு போதிய மீன்கள் பிடிபட்டதும் கரைக்கு திரும்பி வந்து ஏலம் விடுகிறோம். அவற்றை வாங்கிச் செல்லும் வியாபாரிகள் உடனடியாக மீன் அங்காடிகளுக்கு விநியோகம் செய்துவிடுகின்றனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதில் எந்த இடத்திலும் கேடு விளைவிக்கும் வகையிலான ரசாயனங்களை பயன்படுத்தும் அவசியம் ஏற்படவில்லை என்கின்றனர் மீனவர்கள்.
சென்னை மீன்களில் ரசாயனம் இருக்க வாய்ப்பில்லை: இதுகுறித்து இந்திய மீனவர் சங்கத் தலைவர் டி.தயாளன் கூறியது: சென்னையைப் பொருத்தவரை மீன் பற்றாக்குறை உள்ளது. இதனால் மீன்களை இருப்பு வைத்து விற்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. 
மேலும் பார்மோலின் ரசாயனப் பயன்பாடு குறித்து நாங்கள் இதுவரை கேள்விபட்டதில்லை. சென்னையிலிருந்து கேரளத்துக்கு சூரை, மத்தி, காரை, வாளை உள்ளிட்ட மீன்வகைகள் மட்டுமே செல்கின்றன. இவையும் சுமார் 12 மணி நேரத்திற்குள் அங்கு சென்றுவிடுகின்றன. எனவே சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தைப் பொருத்தவரை இத்தகைய ரசாயனம் பயன்படுத்தப்படவேண்டிய அவசியமே இல்லை.
வெளிமாநில வரத்து கண்காணிக்கப்பட வேண்டும்: ஆனால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் மீன்களில் இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது. இது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தயாளன்.
ஒருமணி நேரம் ஊற வைத்து பயன்படுத்தலாம்: மீன் பிரியர்கள், எந்த மீனை வாங்கினாலும் சுத்தமான நீரில் சுமார் ஒரு மணி நேரம் ஊற வைத்து, நன்றாகக் கழுவி சமையல் செய்வதன் மூலம், இத்தகைய ரசாயனங்களின் வீரியம் குறைந்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் உணவுப் பொருளில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. மக்களுக்கு இது தொடர்பாக ஏற்பட்டுள்ள அச்சத்தை அரசு உரிய வகையில் விசாரித்து உண்மையை உடனடியாக வெளியிடுவதன் மூலம் பொதுமக்களின் பீதியைத் தவிர்க்கலாம். அத்துடன் அப்பாவி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைவதையும் தவிர்க்கலாம் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com