லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புது தில்லி: லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்றப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டத்தில், ஒவ்வொரு மாநிலமும் நிச்சயம் ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். 

அந்த மனுவில், லோக் ஆயுக்தா சட்டமானது கடந்த 2013ஆம்ஆண்டு நிறைவேற்றப்பட்டு, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 4 ஆண்டுகளைக் கடந்து விட்ட பின்னரும், லோக் ஆயுக்தா பல்வேறு மாநிலங்களில் உருவாக்கப்படவில்லை. 

ஆதலால் லோக் ஆயுக்தா இல்லாத மாநிலங்களில் அதை ஏற்படுத்தும்படி உத்தரவிட வேண்டும். அதேபோல், பல மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் இருக்கும் லோக் ஆயுக்தாவுக்கு போதிய நிதியையும், உள்கட்டமைப்பு வசதியையும் ஏற்படுத்தி தருவதில்லை. ஆதலால், லோக் ஆயுக்தாவை ஏற்படுத்த போதிய நிதியை பட்ஜெட்டில் மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.பானுமதி ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: ஒடிஸா மாநிலத்தில் லோக் ஆயுக்தா இருக்கிறதா? இல்லையா? என்பது தெரியவில்லை. ஆதலால், ஒடிஸா மாநில தலைமைச் செயலாளர், இதுகுறித்து உச்ச நீதிமன்றத்திடம் விளக்கமளிக்க வேண்டும்.

ஜம்மு-காஷ்மீர், மணிப்பூர், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, புதுச்சேரி, தமிழகம், தெலங்கானா, திரிபுரா, அருணாசலப் பிரதேசம், தில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா ஏன் ஏற்படுத்தப்படவில்லை என்பதற்கான காரணங்களை அந்த மாநில அரசுகள் தெரிவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதற்காக உச்ச நீதிமன்றம் விதித்திருந்த கெடு செவ்வாய் கிழமையுடன் முடிவதாக இருந்தது. இந்நிலையில்  'லோக் ஆயுக்தா' மசோதா தமிழக சட்டப் பேரவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் திங்களன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பாத்திரம் ஒன்றை செவ்வாயன்று காலை தாக்கல் செய்தது. அதன் பிறகு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com