ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
பிரதான அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்.
பிரதான அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த சில நாள்களாக கர்நாடகத்தில் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி அணையில் இருந்து தண்ணீர் கூடுதலாகத் திறக்கப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை நொடிக்கு 25 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி நிலவரப்படி நொடிக்கு 32 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து பிற்பகலில் நொடிக்கு 35 ஆயிரம் கன அடியாக மேலும் உயர்ந்தது.
கபினி அணையிலிருந்து நொடிக்கு 38 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவலை அடுத்து, இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது.
நீர் வரத்து அதிகரித்துள்ளதால், ஒகேனக்கல்லின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. 
வழக்கமாக பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்படும் பிரதான அருவியில் தடுப்பைத் தாண்டியும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கிறது.
சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுரை
நீர்வரத்து அதிகரித்துள்ளது குறித்து, தருமபுரி சார்- ஆட்சியர் ம.ப. சிவன் அருள் செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களிடம் கூறியது:
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து, அருவிப் பகுதிக்கு மேலே ஆற்றுப் பகுதிகளிலும்கூட பொதுமக்களோ, சுற்றுலாப் பயணிகளோ குளிக்கக் கூடாது. ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ முயற்சிக்கக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும். ஒகேனக்கல்லைச் சேர்ந்த பொதுமக்களும் ஆற்றில் இறங்கக் கூடாது என்பதற்காக வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் சிவன் அருள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com