தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ஃபார்மலின் உள்ளதா? இன்னும் ஓரிரு நாட்களில் விடை

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் எனப்படும் ரசாயனம் பூசப்படுவதாக வந்த தகவல் மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் விற்கப்படும் மீன்களில் ஃபார்மலின் உள்ளதா? இன்னும் ஓரிரு நாட்களில் விடை


சென்னை: கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் ஃபார்மலின் எனப்படும் ரசாயனம் பூசப்படுவதாக வந்த தகவல் மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனம் கலந்த மீன்கள் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது தொடர்பாக காசிமேடு, சைதாப்பேட்டை, நொச்சிக்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து செயல் அதிகாரி கதிரவன் கூறுகையில், மீன் சந்தைகளில் இருந்து எடுக்கப்பட்ட மீன்கள் கிண்டி உணவு ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் ஓரிரு நாட்களில் மீன்களில் ஃபார்மலின் பூசப்பட்டதா என்பது தெரிய வரும் என்று கூறினார்.

பார்மலின் குறித்து ஓமந்தூரார் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் கூறுகையில், ஃபார்மலின் ரசாயனம், பொதுவாக மனித உடல் கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனமாகும். இது மனித உடலுக்குள் சென்றால் ரத்தசோகை முதல் புற்றுநோய் வரை பல நோய்களை ஏற்படுத்தும்.

இது குறித்து தென்னிந்திய மீனவர்கள் நலச்சங்கம் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கக் காலம் முடிந்து தற்போதுதான் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அன்றாடம் பிடித்து வரும் மீன்கள் அவ்வப்போது விற்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்துக்கு மீன் தரகர்கள்தான் காரணமாக இருப்பார்கள். அவர்கள் தான் வெளிமாநிலங்களில் இருந்து மீன்களை வாங்கி வந்து தமிழகத்தில் விற்கிறார்கள். ஒருவேளை ஃபார்மலின் இருப்பது உறுதியானால், அது அவர்களது வேலைதான். இது குறித்து நிச்சயம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்படும் மீன்கள் நீண்டநாள்கள் கெடாமல் இருப்பதற்காக, பார்மலின் ரசாயன கலவையை ஐஸ்கட்டிகள் வழியாக மீன்கள் மீது செலுத்தி, விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்ததை அடுத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com