எஸ்.சி. மாணவர் ஊக்கத் தொகை: மத்திய அரசின் திருத்திய நெறிமுறைகள் ஏற்பு: தமிழக அரசு

தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் மத்திய அரசின் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்திய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உதவித் தொகைக்கான வழிகாட்டி நெறிமுறைகளில் திருத்தங்களைத் தெரிவித்து மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தப் புதிய திருத்தங்கள் ஏப்ரல் 2018-லிருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தையும் தமிழக அரசு கூர்ந்து ஆய்வு செய்தது. இதையடுத்து, இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளை நிகழ் கல்வியாண்டில் இருந்து தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்துக்குள் உள்ள கல்வி நிலையங்களுக்கு அதுகுறித்து தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தமிழக அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
வழிகாட்டி நெறிமுறைகள் என்ன?: மத்திய அரசின் சார்பில் 21 பக்கங்கள் கொண்ட திருத்தப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், உதவித் தொகை பெற விரும்பும் பெற்றோர்கள் அல்லது காப்பாளர்களின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டக் கூடாது. இந்த வருவாய் அளவானது ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளிகளுக்கு இடையே ஆய்வு செய்யப்படும்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக இருக்க வேண்டும். மத்திய-மாநில பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் படிப்போரும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவர்களும் கல்வி உதவித் தொகை பெற தகுதியானவர்கள் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் புதிதாக வகுக்கப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு கல்வி நிலையத்துக்கும் மாவட்ட ஆட்சியரால் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com