சத்துணவு முட்டை கொள்முதல்: கிறிஸ்டி உள்பட எந்த நிறுவனமும் தேர்வாகவில்லை

சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக புதன்கிழமையன்று நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி திறப்பில் எந்த நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை. 

சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக புதன்கிழமையன்று நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி திறப்பில் எந்த நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை. 
முட்டை கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் போட்டியில், வருமான வரித் துறை சோதனையில் சிக்கியுள்ள கிறிஸ்டி உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் பங்கேற்றன. அவை எதுவும் தேர்வாகவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதலுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு திறக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான (2018 ஜூலை முதல் 2019 ஜூலை) ஒப்பந்தப்புள்ளிகள் ஏற்கெனவே கோரப்பட்டிருந்தன. அதில், கிறிஸ்டி நிறுவனத்தின் மூன்று நிறுவனங்கள், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு நிறுவனங்கள், நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உற்பத்தியாளர் கூட்டமைப்பினர் என மொத்தம் 6 நிறுவனங்கள் பங்கேற்றன.
எவரும் தேர்வாகவில்லை: முட்டை கொள்முதலுக்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் புதன்கிழமையன்று திறக்கப்பட்டன.
அரசுத் துறைக்கு கொள்முதல் செய்வதற்கான அனுபவம் 7 ஆண்டுகள் இருக்க வேண்டும், அக்மார்க் தரச்சான்று பெற்றிருக்க வேண்டும் என்பன உள்பட தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிக்கு 19 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியிலான ஒப்பந்தப் புள்ளிகள் திறப்பின் போது, 6 நிறுவனங்களில் எந்தவொரு நிறுவனமும் அரசின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை எனவும், இதனால் முட்டை கொள்முதலுக்கு எந்த நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் வருமான வரித் துறை சோதனை, வருமான வரி ஏய்ப்பு எனச் சர்ச்சையில் சிக்கிய கிறிஸ்டி குழுமத்தின் மூன்று நிறுவனங்கள், ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்றிருந்தன. 
இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சத்துணவு திட்டத்துக்கான முட்டை கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி திறப்பில் எந்த நிறுவனமும் தேர்வு செய்யப்படவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com