சத்துணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் சோதனை: ரூ.1,350 கோடி வருமான வரி ஏய்ப்பு

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவுப் பொருள் தயாரித்து வழங்கும் நிறுவனத்திலும், அந்த

தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு சத்துணவுப் பொருள் தயாரித்து வழங்கும் நிறுவனத்திலும், அந்த நிறுவனத்துடன் வணிகத் தொடர்பு வைத்திருந்த நிறுவனங்களிலும் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களுக்கு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு தனியார் நிறுவனம் சத்துமாவு, முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருள்களை விநியோகம் செய்கிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் வருமான வரித் துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
76 இடங்களில் சோதனை: அந்தப் புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அந்த தனியார் நிறுவனத்திலும், அந்த நிறுவத்துடன் பணத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும், வணிக தொடர்பு வைத்திருக்கும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலும் கடந்த 5-ஆம் தேதி ஒரே நேரத்தில் சோதனையை தொடங்கினர்.
இந்த சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், புது தில்லி என மொத்தம் 76 இடங்களில் நடைபெற்றது.
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் சுதாதேவியிடமும் வருமான வரித்துறையினர் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர். இந்த சோதனை திங்கள்கிழமை நிறைவு பெற்றது.மொத்தம் 5 நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.
ரூ.1350 கோடி வரி ஏய்ப்பு: சோதனையில் கணக்கில் வராத ரூ.17 கோடி ரொக்கம், 10 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 50-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், மடிக்கணினிகள், 100 பென்டிரைவ்கள் ஆகியவற்றையும் வருமான வரித்துறையினர் கைப்பற்றினராம்.
சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை மதிப்பீடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த பணியின் முடிவில் சோதனை நடைபெற்ற அனைத்து நிறுவனங்களும் சுமார் ரூ.1,350 கோடி வரை வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
விரைவில் விசாரணை: இந்த வரி ஏய்ப்புத் தொடர்பாகவும், போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாகவும் அந்த நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்களுக்கு அழைப்பாணையும் அனுப்பப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com