விதிமுறைகளை மீறவில்லை.. குற்றச்சாட்டுகளுக்கு ஈஷா மையத்தின் பதில்

தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டிடங்கள் கட்டியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஈஷா யோகா மையம் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது.  
கோப்புப்படம்
கோப்புப்படம்

கோவை அருகே ஈஷா மையத்தில் தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஈஷா மையம் பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஜக்கி வாசுதேவ் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறார். கடந்த திங்கள்கிழமை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளில் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை சமர்பித்துள்ளார். 

அதில், ஈஷா யோகா மையம் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் ஆணையத்திடம் (ஹெச்ஏசிஏ) இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஈஷா யோகா மையம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், 

* ஈஷா யோக மையம் வனத்தையோ அல்லது ஆதிவாசி நிலத்தையோ அல்லது வேறு வகையான நிலங்களையோ ஆக்கிரமிப்பு செய்யவில்லை. ஈஷா யோக மையம் வன நிலத்தில் கட்டப்படவில்லை. ஈஷா யோக மையத்திற்கு சொந்தமான பட்டா நிலத்தில் மட்டுமே மையம் கட்டப்பட்டுள்ளது. 

2013-ஆம் ஆண்டு, தமிழக வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதனை சரிபார்த்தபின், ஈஷா மையம் முழுக்க முழுக்க பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்றும் தெள்ளத் தெளிவாக பதிவு செய்துள்ளனர். (ஆவணக் குறிப்பு எண்: CFCIT/07/2013).
 
* தமிழக வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஈஷா யோக மையத்தின் கட்டிடங்கள் யானை வலசைப் பாதையில் அமையவில்லை என்பதை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளனர். இதனை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி (RTI) அனைவரும் தெரிந்துகொள்ளலாம். 

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகமும், இந்திய வனவிலங்கு அறக்கட்டளையும், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியமும், யானைகள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும், ஈஷா மையம், யானை வலசைப் பாதைக்கு அருகில்கூட இல்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளனர்.

* ஈஷா அறக்கட்டளை எழுப்பியுள்ள அத்தனை கட்டிடங்களுக்கும், ஜூலை 2017-ஆம் ஆண்டிற்கு முன்பு, 58வது ஹெச்ஏசிஏ சந்திப்பில், மலைத்தள பாதுகாப்பு குழுமம் அனுமதி வழங்கி ஒப்புதல் அளித்துள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். 

சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் தடையின்மைச் சான்றிதழை வழங்கிய பின்னரே ஹெச்ஏசிஏ தன் ஒப்புதலை வழங்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com