இனத்தின் பெருமை பண்பாடும் வரலாறும்: கவிஞர் வைரமுத்து

ஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் அதன் பெருமை என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
செயங்கொண்டார் படத்துக்கு மரியாதை செலுத்தும் கவிஞர் வைரமுத்து. உடன் (இடமிருந்து) இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் ராஜேஷ். கவிஞர்கள் காசிமுத்து மாணிக்கம், முத்துலிங்கம், 
செயங்கொண்டார் படத்துக்கு மரியாதை செலுத்தும் கவிஞர் வைரமுத்து. உடன் (இடமிருந்து) இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், நடிகர் ராஜேஷ். கவிஞர்கள் காசிமுத்து மாணிக்கம், முத்துலிங்கம், 

ஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் அதன் பெருமை என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
தமிழாற்றுப்படை வரிசையில் செயங்கொண்டார்' (கலிங்கத்துப்பரணி) என்ற தலைப்பில் கவிஞர் வைரமுத்து சென்னையில் வியாழக்கிழமை நிகழ்த்திய உரை: ஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் நிகழ் காலத்தை முன் நடத்தும் வலிமை. தன் பழம்பெருமையின் மீது பிரிட்டன் பற்று வைத்திருப்பது போன்று, தன் பாரம்பரியத்தின் மீது சீனா பழைமை பாராட்டுவது போல, கிரேக்கம் தன் நாகரிகத்தை நினைத்து நினைத்து நெகிழ்வது போல தடவிப் தடவிப் பார்த்துக் கொள்ள தமிழர்களுக்கும் பெருமைகள் உண்டு. 
கப்பலில் பயணித்த மயில் தோகை! உலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச் சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது. எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா மதுக் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து.
தங்கத்தையும் காற்றையும்...அன்று முதல் இன்று வரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாதரூபம் என்று நான்கு வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள். பாய்மரக் கப்பல்களுக்கெல்லாம் காற்றின் தயவே காரணமென்று வாடை, கோடை, கொண்டல், தென்றல் என்று காற்றையே நான்காகப் பிரித்தவர்கள் தமிழர்கள். 
அரிய வரலாற்றுக் குறிப்புகள்: முதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப் பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது, இன்று மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கில் 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார் சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார். விசாகப் பட்டினத்தை வென்று அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காணக் கிடைக்கிறது. கங்கையும் கடாரமும் கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.
தீங்கில்லா வளர்ச்சி வேண்டும்: தமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும்; திட்டங்கள் வேண்டும்; மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால், முட்டையைக் குஞ்சு உள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத் தீங்கு செய்ய அல்ல. அப்படித்தான் வேண்டும் எட்டு வழிச்சாலைகளும். அரசு ஏழைகளின் பக்கம் நிற்கும் என நம்புகிறேன் என்றார். 
பங்கேற்றோர்: இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் வள்ளிநாயகம், மாயாண்டி, இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஜி.திருவாசகம், கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்து மாணிக்கம், மலேசிய எழுத்தாளர் ராஜேந்திரன், பேராசிரியர் ஹாஜாகனி, எழுத்தாளர் மரபின் மைந்தன் முத்தையா, சொற்பொழிவாளர் செல்வேந்திரன், நடிகர் ராஜேஷ் உள்பட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். 
இந்த நிகழ்ச்சிக்கு வெற்றித்தமிழர் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com