கோயில் சொத்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை

புதுவையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் அசையும், அசையா சொத்துகள், சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆவணப்படுத்த
கோயில் சொத்துகளை ஆவணப்படுத்த நடவடிக்கை

புதுவையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் அசையும், அசையா சொத்துகள், சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் ஆவணப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அம் மாநில முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
புதுவை மாநிலத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 14 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பிரசித்தி பெற்ற கோயில்களில் அன்னதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. புதுவை சுற்றுலாத் துறை மூலம் வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயில், திருக்காஞ்சி கங்கைவராக நந்தீஸ்வரர் கோயில்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயிலில் புதிதாக ரூ. 4 கோடியே 76 லட்சத்து 62 ஆயிரத்து 950 செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதேபோல, நலிவடைந்த பகுதிகளில் உள்ள 223 கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்காக முதல் தவணையாக 6 மாதங்களுக்கு ரூ. 22.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் மீதித் தொகை விரைவில் வழங்கப்படும்.
புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள 243 கோயில்களின் முழு விவரங்கள் அடங்கிய கையேடு தமிழ், ஆங்கில மொழிகளில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக, புதுவை மாநிலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பாரம்பரிய கோயில்கள் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் இவை வெளியிடப்பட்டுள்ளன.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அகலங்கண்ணு பகுதியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டுள்ளது. அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களின் அசையும், அசையா சொத்துகள், சிலைகள், தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவை அனைத்தும் ஆவணப்படுத்தப்படும். மேலும், அசையா சொத்துகள் அனைத்தும் நில அளவை செய்யப்பட்டு, பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல, 129 ஹஜ் பயணிகளுக்கு பயணச் செலவு வழங்கப்படும். வக்ஃபு வாரியம் அமைக்கக் கோரிக்கை விடப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் முதல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com