சார்புச் செயலாளர்கள்- பிரிவு அலுவலர்களுக்கான கட்டாயப் பயிற்சியில் புதிய மாற்றங்கள்: தமிழக அரசு உத்தரவு

தலைமைச் செயலகத்தில் உள்ள சார்புச் செயலாளர்கள், பிரிவு அலுவலர்கள் ஆகியோர் களத்துக்குச் சென்று மேற்கொள்ளும் கட்டாயப் பயிற்சியில் புதிய மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது.

தலைமைச் செயலகத்தில் உள்ள சார்புச் செயலாளர்கள், பிரிவு அலுவலர்கள் ஆகியோர் களத்துக்குச் சென்று மேற்கொள்ளும் கட்டாயப் பயிற்சியில் புதிய மாற்றங்களை தமிழக அரசு செய்துள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள சார்புச் செயலாளர்கள், பிரிவு அலுவலர்கள் வெளியிடங்களுக்குச் சென்று பயிற்சி பெறுவது கட்டாயமாகும். இந்த பயிற்சி இப்போது நடைமுறையில் இருந்தாலும் அதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் அளிக்க பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை செயலாளரை (பயிற்சி) கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தலா 30 பிரிவு அலுவலர்கள்: அதன்படி, நிதிநிலை அறிக்கை தயார் செய்யப்படும் மற்றும் பேரவையில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் காலத்தைத் தவிர்த்து இதர காலங்களில் அதிகாரிகளை பயிற்சிக்கு அனுப்பலாம். ஒவ்வொரு பயிற்சிக் குழுவிலும் தலா 30 பிரிவு அலுவலர்கள் மற்றும் சார்புச் செயலாளர்கள் இடம்பெறலாம் என்பன போன்ற அம்சங்களைக் கொண்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கட்டாய மாவட்ட பயிற்சி என்ற நடைமுறைக்குப் பதிலாக, பிரிவு அலுவலர்களுக்கு கட்டாய துறைத் தலைமை மற்றும் மாவட்ட பயிற்சி எனவும், சார்புச் செயலாளர்களுக்கு கட்டாய வகுப்பறை மற்றும் நகர அலுவலகங்களில் பயிற்சி எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மூன்று, மூன்று மாதங்களாக: தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலர்கள் பெரும்பாலும் துறைத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, அவர்களுக்கு துறைத் தலைமை அளவிலான பயிற்சி கொடுக்கப்படும். ஆறு மாத பயிற்சி என்பது மூன்று, மூன்று மாதங்களாகப் பிரித்து அளிக்கப்படும். முதல் மூன்று மாதங்கள் சென்னை நகரில் உள்ள பல்வேறு துறைத் தலைமை அலுவலகங்களிலும், மீதமுள்ள மூன்று மாதங்கள் மாவட்டங்களில் உள்ள அலுவலகங்களிலும் பயிற்சி அளிக்கப்படும்.
வகுப்பறை அளவிலான பயிற்சி: சார்புச் செயலாளர்களுக்கு மூன்று மாதங்கள் வகுப்பறை அளவிலான பயிற்சிகள் கொடுக்கப்படும். அதில் எட்டு வாரங்கள், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்திலும், ஒரு வாரம் மாநில சட்ட அகாதெமியிலும், தலா இரண்டு வாரங்கள் சென்னையில் உள்ள இதர முக்கியமான அலுவலகங்களிலும் பயிற்சி அளிக்கப்படும் என தலைமைச் செயலாளரின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி பயிற்சி பெறுவது கட்டாயம்: பிரிவு அலுவலர்கள் மற்றும் சார்புச் செயலாளர்கள் மாவட்ட பயிற்சிக்குச் செல்வதாகக் கூறி பெரும்பாலானோர் சென்னையில் தங்கி விடுவது உண்டு. இந்த நிலையை மாற்ற, கட்டாய பயிற்சி என்ற நடைமுறையில் புதிய மாற்றங்களை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த பயிற்சி நடைமுறைகளில் பெரும்பாலானவை சென்னையைச் சுற்றியே இருக்கும்படி வரையறுக்கப்பட்டுள்ளன. இதனால், கட்டாயம் பயிற்சி பெற்றே ஆக வேண்டிய நிலை பிரிவு அலுவலர்கள் மற்றும் சார்பு செயலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com