பசுமை வழிச் சாலை: திட்ட இயக்குநர் பதில் மனு தாக்கல்

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி

சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக, திட்ட இயக்குநர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை -சேலம் பசுமை வழிச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்தும், அதுதொடர்பான அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தருமபுரியைச் சேர்ந்த பி.வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
பதில் மனு தாக்கல்: இந்த வழக்கில் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை அமல்படுத்தும் பிரிவின் திட்ட இயக்குநர் பி.டி.மோகன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வசதிகளுடன் வளர்ச்சியடைந்துள்ளன. இதனால் இலகுரக மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சென்னையிலிருந்து திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் செல்லும் சாலையிலும், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி வழியாக சேலம் செல்லும் சாலையிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
பசுமை வழிச் சாலைத் திட்டத்தால் சென்னை -சேலம் இடையிலான பயண நேரம் குறையும். இதன் பயனாக கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கான எரிபொருள் செலவில் நாளொன்றுக்கு ரூ.10 கோடி அளவுக்கு (2.85 லட்சம் லிட்டர் டீசல்) சேமிக்கப்படும். வாகனப் புகையின் வெளியேற்றமும் குறைவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். இந்தத் திட்டத்தால் பின்தங்கிய நகரங்களில் பல தொழிற்சாலைகள் உருவாகும். 
அனுமதி கோரி விண்ணப்பம்: இந்தத் திட்டத்துக்காக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகத்தின் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 
நிபந்தனைகள்: இதன்படி கடந்த மே மாதம் நிபுணர் மதிப்பீட்டுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாதையை மாற்றி அமைக்க ஆய்வு செய்ய வேண்டும், கல்வராயன் மலை வனப்பகுதியைத் தவிர்க்கும் வகையில் செங்கிராமம் வழியாக சேலத்துக்கு பாதை அமைக்க வாய்ப்புள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும், நெடுஞ்சாலை அமைப்பதற்காக நீர் நிலைகள், சதுப்பு நிலங்களைத் தவிர்க்க வேண்டும், இந்தத் திட்டம் வனவிலங்குகளின் வழித்தடங்கள், சரணாலயங்களின் அருகில் அமைக்கப்படவில்லை என்பதற்கான தடையில்லாச் சான்று பெற வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஜூன் 8 -ஆம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. இதன்படி, ஐஐடி சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணைப் பேராசிரியர், பசுமைவழிச் சாலைத் திட்டம் அமைப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த மதிப்பீட்டு ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இந்தத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com