மருத்துவக் கலந்தாய்வு நிறுத்திவைப்பு: தேர்வுக் குழு அறிவிப்பு

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ
சென்னையில் அண்மையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி. (கோப்புப் படம்)
சென்னையில் அண்மையில் நடைபெற்ற எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி. (கோப்புப் படம்)

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற மதுரை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களுக்காக நடைபெற இருந்த கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. 
இதன் காரணமாக, வியாழக்கிழமை வெளியிட வேண்டிய அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகளும் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பு: நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட பிறகு, எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது. மேலும், அதுவரை எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல்கட்ட கலந்தாய்வு: தமிழகத்தில் அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகள்-சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியின் இடங்கள் என 2,639 இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 862 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்டவை முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்களும் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். முதல்கட்ட கலந்தாய்வில் மொத்தம் 3,882 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது; இவர்களில் 3,500-க்கும் மேற்பட்டோருக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்துள்ளது; மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2,805 பேருக்கும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர பாடத் திட்டத்தில் படித்த 1,077 மாணவர்களுக்கும் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் அளிக்கப்பட்டது. கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர்.
669 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்கள்: தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 1045 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 376 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டன. முதல் கட்ட கலந்தாய்வு நிறைவுக்குப் பிறகு 669அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்கள் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: தனியார் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்த 516 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 16, 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண் அளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதைத் தொடர்ந்து, எம்.பி.பி.எஸ். நிர்வாக ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்: இது தொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
2018-2019-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ், பிடிஎஸ். மாணவர் சேர்க்கையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கலந்தாய்வு நீதிமன்ற உத்தரவின் பேரில் ரத்து செய்யப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மறுகலந்தாய்வு தேதி உள்ளிட்ட விவரங்கள் இணையதளங்களில் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அகில இந்திய கலந்தாய்வும் நிறுத்தம்: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 15 சதவீத இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் காரணமாக இதன் நடைமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு வியாழக்கிழமை வெளியிட்டு அறிவிப்பில், நீதிமன்றத்தில் இருந்து மறுஉத்தரவு வரும் வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியிடுவது உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வு நடைமுறைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: சிபிஎஸ்இ திட்டம்
தமிழில் நீட் தேர்வெழுதியோருக்கு கருணை மதிப்பெண் வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வில், ஆங்கில பதிப்பில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் கேள்விகளில் பிழை இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 10-ஆம் தேதி உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. பிழையுள்ள 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என்ற அடிப்படையில், 196 மதிபெண்களை வழங்கி, தரவரிசைப் பட்டியலை திருத்தி வெளியிடுமாறு சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கேள்விகளில் பிழை இருந்ததால் மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளானதாகக் கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டி.கே.ரங்கராஜன் தொடுத்த வழக்கின் அடிப்படையில், மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைக்க வழிவகை ஏற்பட்டது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் சிபிஎஸ்இ ஆலோசித்து வருவதாகவும், அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேல்முறையீடு என்னவாகும்?: பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு, ஆங்கிலத்துடன், அவர்களது பிராந்திய மொழியுடன் கூடிய இரண்டு கேள்வித் தாள்கள் வழங்கப்படும். ஒருவேளை, பிராந்திய மொழிக்கான மொழிபெயர்ப்பு தெளிவின்றி இருந்தால், ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாகக் கருதப்படும்'' என்று நீட் தேர்வுக்காக சிபிஎஸ்இ வகுத்துள்ள விதிமுறைகளில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தமது வாதத்தை முன்வைக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
நீட் தேர்வானது, 180 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் அடிப்படையில், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு, மொத்தம் 11 மொழிகளில், 136 மையங்களில் நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 4-ஆம் தேதி வெளியாகின. தமிழகத்தில் 10 நகரங்களில் 170 தேர்வு மையங்கள் மூலம் 1.07 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com