அரசு சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் போட்டிகள்

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை (ஜூலை 15) கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாட தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் இதையொட்டி மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 16) பல்வேறு போட்டிகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. 
நாளை வழக்கம்போல் விடுமுறை: காமராஜர் பிறந்தநாள் பள்ளிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும், அன்றைய தினம் பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி தினத்தை அரசு சார்பில் கொண்டாட அனுமதி அளிக்கப்படுகிறது. 
இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. சிறந்த பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துவதற்கு பரிசுத் தொகை வழங்கிட பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.56 லட்சம், தொடக்கக் கல்வித் துறைக்கு ரூ.24 லட்சம் என மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது. இதில் 50 சதவீத தொகையாக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.28 லட்சமும், தொடக்கக் கல்வித் துறைக்கு ரூ.12 லட்சமும் நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள ரூ. 40 லட்சம் செலவினத்தை, பெற்றோர் ஆசிரியர் கழக நிதி அல்லது இதர நிதி ஆதாரத்தைக் கொண்டு மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளார்.
மேலும், பள்ளிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தி காமராஜர் பெயரில் பரிசு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் காமராஜரின் வரலாறு, அவரது திட்டங்கள், சாதனைகள், கல்விக்கு அவர் ஆற்றிய பணிகள் குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com