இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட்' மதிப்பெண்ணிலிருந்து விலக்கு சாத்தியமானது எப்படி?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணிலிருந்து விலக்களிக்கப்படாத நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் இதிலிருந்து
இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் நீட்' மதிப்பெண்ணிலிருந்து விலக்கு சாத்தியமானது எப்படி?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணிலிருந்து விலக்களிக்கப்படாத நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு சாத்தியப்பட்டது எப்படி என்று மாணவர்கள், பெற்றோர் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு நீட் மதிப்பெண்ணிலிருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இரண்டு கடிதங்கள்: இந்த நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் இரண்டு முறை கடிதம் அனுப்பியது. 

இதற்கு ஆட்சேபம் தெரிவித்தும், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த ஆயுஷ் அமைச்சகம் நீட் தேர்வு மதிப்பெண்ணிலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தெரிவித்து தமிழக அரசுக்கு ஜூன் மாதம் பதில் அளித்தது. 

விலக்கு அறிவிப்பு: மத்திய அரசு மறுத்துவிட்டபோதும், தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு நிகழாண்டில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய முறை மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் ஆணையர் டாக்டர் கே.செந்தில்ராஜ் கூறியது: 

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாகவே நீட் தேர்வை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு மதிப்பெண் முறையை அமல்படுத்தும்படி மத்திய அரசு சுற்றறிக்கை, கடிதம் மட்டுமே அனுப்பியது.

இந்திய மருத்துவ முறை மத்தியக் கவுன்சில் சட்டம் 1970 -இல், இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான தகுதி வரம்பில், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தில் இதுவரை திருத்தம் கொண்டு வரவில்லை. அதன் அடிப்படையிலேயே தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்றார் அவர்.

திருத்தம் செய்யப்படுமா?: நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டுமென, இந்திய மருத்துவ முறை மத்தியக் கவுன்சில் சட்டம் 1970 -இல் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றால் மக்களவை, மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஆயுஷ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைமுறைகளை அக்டோபர் 31 -ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். ஒருவேளை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தாலும் அது அடுத்த கல்வியாண்டுக்கே பொருந்தும். எனவே, நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே, இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com