நோய்களைப் பரப்பும் 3 வகைக் கொசுக்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை

மனிதர்களைக் கடிக்கும் கொசுக்களில், மூன்று வகைக் கொசுக்கள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
நோய்களைப் பரப்பும் 3 வகைக் கொசுக்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை

மனிதர்களைக் கடிக்கும் கொசுக்களில், மூன்று வகைக் கொசுக்கள் ஆபத்தானவை என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

மருத்துவர்கள் பொதுமக்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.ஜெயந்தி, பொது மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் ரகுநந்தன் ஆகியோர் பேசியது: 

தொற்று நோய்கள் பரவுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானது கொசு கடிப்பதன் மூலம் பரவும் நோய்களாகும். கொசுக்களில் அனோபிலிஸ், ஏடிஸ், கியூளக்ஸ் ஆகிய மூன்று வகைக் கொசுக்கள் மிகவும் முக்கியமானவை.

அனோபிலிஸ் கொசுக்கள் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டி, கிணறு போன்ற நல்ல நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்தக் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா காய்ச்சல் ஏற்படும். குளிருடன்கூடிய அதிகமான காய்ச்சல், தலைவலி, வாந்தி, காய்ச்சல் குறையும்போது அதிகமான வியர்வை ஆகியவை இதன் அறிகுறிகளாகும். இதனை எளிதாகக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்.

டெங்கு, சிக்குன்குன்யா: ஏடிஸ் கொசுக்களும் சுத்தமான தண்ணீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். இந்தக் கொசுக்கள் பகலில் கடிக்கக்கூடியவை. இவற்றின் மூலம் டெங்கு, சிக்குன்குன்யா நோய்கள் பரவும். இந்தக் கொசுக்கள் 500 மீட்டர் தூரம் வரை பறக்கக் கூடியவை. எனவே, வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருத்தல் வேண்டும். அதிகமான காய்ச்சல், எலும்பு மற்றும் மூட்டு வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு, ரத்தப்போக்கு இதன் அறிகுறிகளாகும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்கலாம்.

யானைக்கால், மூளைக் காய்ச்சல்: கியூளக்ஸ் கொசுக்கள் அசுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியவை. இவை யானைக்கால், மூளைக் காய்ச்சல் நோய்களைப் பரப்பக்கூடியவை. எனவே, கொசுக்கள் இனப்பெருக்கத்தைக் தடுக்கும் வழிமுறைகளை பொதுமக்கள் கையாண்டு அவை உற்பத்தியாகாத வகையில், வீட்டையும் சுற்றுப்புறத்தையும் பாதுகாக்க வேண்டும். 

காய்ச்சல் வந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனே அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வர வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com