அனைத்து மாவட்டங்களிலும் 2 மாதத்தில் நடமாடும் நூலகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
அனைத்து மாவட்டங்களிலும் 2 மாதத்தில் நடமாடும் நூலகங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய பொது நூலகம் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் இந்தியாவின் அறிவு மையங்களாக நூலகங்களை உருவாக்குவதில் பொது நூலகங்களின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் செங்கோட்டையன் பேசியது:
சிறந்த கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நூலகங்கள் நமக்குப் பயன்படுகின்றன. வரும் ஆண்டில் தேசிய அளவில் நூலகர்கள் இணைந்து கருத்தரங்கம் நடத்துவதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கவுள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலக வளர்ச்சிக்கு நிதி: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளர்ச்சிக்காக ரூ.5 கோடி ஒதுக்கப்படும். தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடமாடும் நூலகங்கள் அமைக்கப்படும்.
நூலகங்களில் சுமார் 3 லட்சம் பேரை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் ஒன்றரை லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உலக புத்தகத் திருவிழா நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
எம்.எஸ்.சுவாமிநாதன்: சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே ஏழை மக்களுக்கு அறிவை வழங்க வேண்டும் என்பதுதான். அதற்காகவே மாவட்ட அளவில் மக்களைச் சென்றடைய கிராம வளம் - கிராம அறிவு மையங்கள் தொடங்கப்பட்டன.
அரசுத் தரப்பில் வெளியிடப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெற இம்மையங்கள் துணைபுரிந்தன. ஒவ்வொரு கிராம அறிவு மையத்திலும் நூலகத்திற்கென தனி அறையும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய கருத்தரங்கம் தேசிய அளவில் நடத்தப்பட வேண்டும் என்றார் எம்.எஸ்.சுவாமிநாதன்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்: முன்னதாக பொது நூலகங்களை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய பொது நூலகம் இயக்கம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. மேலும் நூலகம் தொடர்பான மொபைல் செயலியும் அறிமுகம் செய்யப்பட்டது.
பங்கேற்றோர்: நிகழ்ச்சியில் தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் வி.செல்வம், இந்திய பொது நூலகம் இயக்க நிர்வாகிகள் பஷீர் அகமது ஷட்ராக், சுபாங்கி ஷர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாவட்ட நூலகங்களில் ஐஏஎஸ் பயிற்சி மையங்கள்
நிருபர்களிடம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது: தமிழகத்தில், 32 மாவட்ட நூலகங்களில் இரண்டு மாதத்தில் ஐஏஎஸ் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளன. 
மாவட்ட நூலகங்களில் 100 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு காணொலி மூலம் பயிற்சி அளிக்கப்படும். அதற்காக மாவட்ட நூலகங்களில் தேவையான புத்தக வசதி செய்யப்படும். இந்த மையங்கள் மூலம் கிராமப்புற மாணவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற இந்திய ஆட்சிப்பணித் தேர்வு, குரூப்-1 தேர்வுக்குத் தயாராக சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழகத்தில் 4,622 நூலகங்களில் 314 நூலகங்கள் முழுமையாக செயல்படுகின்றன. இவை ஒரு மாதத்துக்குள் கணினி மயமாக்கப்படும். மேலும் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் 412 இடங்களில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும். நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com