ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: ஜூலை 23-இல் கலந்தாய்வு தொடக்கம்

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.

அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 23-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்த விவரமும், கட்-ஆஃப் விவரங்களும், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in   இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் சீர்மிகு சட்டப் பள்ளியில் வழங்கப்படும் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான 2018-19-ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் அண்மையில் நடத்தி முடித்தது. அதனைத் தொடர்ந்து, அரசு சட்டக் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 1,411 இடங்களைக் கொண்ட பி.ஏ.-எல்.எல்.பி. ஐந்தாண்டுகள் ஒருங்கிணைந்த சட்டப் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை 23 -ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர மொத்தம் 7,644 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 7,342 விண்ணப்பங்கள் தகுதியுள்ளவையாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசை மற்றும் கட்-ஆஃப் விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூலை17) வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, வரும் 23 -ஆம் தேதி முதல் 26 -ஆம் தேதி வரை இவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில், பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கட்-ஆஃப் 90.625 ஆகும்.
அழைப்புக் கடிதம்: கலந்தாய்வு அழைப்புக் கடிதங்கள் தகுதியுள்ள மாணவர்கள் அனைவருக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழக இணையதளத்திலிருந்தும் அழைப்புக் கடிதங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 
அழைப்புக் கடிதத்துடன், அனைத்து அசல் சான்றிதழ்களையும் மாணவர்கள் எடுத்து வரவேண்டும். அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்களும், அவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில், அதற்கான தேதியில் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com