நெடுஞ்சாலை ஒப்பந்த நிறுவனத்தில் சோதனை: மேலும் ரூ.90 கோடி பறிமுதல்

தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையின் இரண்டாவது நாளில் மேலும் ரூ.90 கோடி ரொக்கமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்
கமுதியை அடுத்த கீழமுடிமன்னார்கோட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய செய்யாத்துரையின் பூர்வீக வீடு.
கமுதியை அடுத்த கீழமுடிமன்னார்கோட்டையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய செய்யாத்துரையின் பூர்வீக வீடு.

தமிழக நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த நிறுவனத்தில் நடத்தப்பட்டு வரும் சோதனையின் இரண்டாவது நாளில் மேலும் ரூ.90 கோடி ரொக்கமும், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர்.
பினாமிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கீழமுடிமன்னார் கோட்டையைச் சேர்ந்த செய்யாத்துரை, எஸ்.பி.கே. அண்ட் கோ என்ற பெயரில் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். நூற்பாலை, நட்சத்திர ஹோட்டல், கல்குவாரி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அவரது நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு, முறைகேட்டில் ஈடுபட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித் துறையினர், திங்கள்கிழமை ஒரே நேரத்தில் செய்யாத்துரைக்கு சொந்தமான 50 இடங்களில் சோதனையை மேற்கொண்டனர். இச்சோதனையில் செய்யாத்துரை நிறுவனங்களுடன் வணிகத் தொடர்பும், பணப் பரிமாற்றமும் வைத்திருந்த நிறுவனங்களும் தப்பவில்லை.
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன் வீடு, நிறுவனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சென்னையில் மட்டும் இச் சோதனை 7-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது. முதல் நாள் சோதனையில், கணக்கில் வராத ரூ.110 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அதேவேளையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து, முதலீட்டு ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர்கள் கூறினர்.
பணமும், நகையும் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வந்ததால், இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்த சோதனை நீடித்தது. சென்னை பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சோதனை நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வந்த சோதனைகள் படிப்படியாக நிறைவடைந்தன. மேலும் ரூ.90 கோடி பணம் பறிமுதல்: இருப்பினும் மதுரை பகுதியில் சில இடங்களில் சோதனை நீடித்து வருவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இரண்டாவது நாளில், மேலும் ரூ.90 கோடி ரொக்கம், 5 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித் துறையினர் தெரிவித்தனர். ஆனால், செய்யாத்துரையின் வீட்டில் இருந்து ரூ.24 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டதாக வருமான வரித் துறை தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம்: சோதனையில் சிக்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து, முதலீட்டு ஆவணங்கள், வங்கி ஆவணங்களை மதிப்பிடும் பணியில் வருமான வரித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவை முறையாக வரி செலுத்தப்பட்டு, செய்யாத்துரையால் வாங்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
முதல் கட்டமாக செய்யாத்துரை பினாமிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் வருமான வரித்துறையினரிடம் சிக்கியுள்ளது. இந்த ஆவணங்களில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ரூ.95 கோடி பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதை வருமான வரித் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதேவேளையில் செய்யாத்துரை தன்னிடம் இருந்த கருப்பு பணத்தை, சென்னையில் உள்ள பிரபல நகைக் கடைகள் மூலம் தங்கமாக மாற்றியிருப்பதும் வருமானவரித் துறைக்கு தெரியவந்துள்ளது.
இந்த முறைகேட்டை உறுதி செய்வதற்காக, தியாகராய நகர், மயிலாப்பூரில் உள்ள இரு நகைக் கடைகளில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க்: செய்யாத்துரை நிறுவனம், கணக்கில் வராத பணத்தை, கீழ் ஒப்பந்ததாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒப்பந்தப் பணமாகவும், ஊதியமாகவும் கொடுத்ததுபோல பொய்க் கணக்கு எழுதியிருப்பதும் வருமானவரித் துறைக்குத் தெரியவந்துள்ளது. அத்துடன், செய்யாத்துரைக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், ஹார்ட் டிஸ்குகள், மடிக்கணினிகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் பணி நிறைவடைந்த பின்னர், செய்யாத்துரை தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ள வருமான வரித் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு தொடர்பு?: இதற்கிடையே இச் சோதனையில் சில அரசியல்வாதிகளுக்குத் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் அடுத்தகட்டமாக அந்த அரசியல்வாதிகளின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com