பசுமை வழிச் சாலைக்கு பதிலாக வாணியம்பாடி - சேலம் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றலாம்

பசுமை வழிச்சாலைக்கு பதிலாக வாணியம்பாடி முதல் சேலம் வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றலாம் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி
பசுமை வழிச் சாலைக்கு பதிலாக வாணியம்பாடி - சேலம் சாலையை 6 வழிச் சாலையாக மாற்றலாம்

பசுமை வழிச்சாலைக்கு பதிலாக வாணியம்பாடி முதல் சேலம் வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றலாம் என தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 
அரூர் வட்டம், முத்தானூர் (எம்.தாதம்பட்டி) கிராமத்தில் எட்டு வழி பசுமை விரைவுச் சாலைத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: அரூர் வழியாகச் செல்லும் சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை வேண்டும் என்று விவசாயிகள் ஒருவர் கூட அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. இந்தத் திட்டத்தை மக்கள் யாரும் விரும்பவில்லை. மக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் வலுக்கட்டாயமாகக் கொண்டு வருகின்றன.
பசுமை வழிச்சாலை அமையும் பகுதியில் பாக்கு, தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். எந்த பயனும் இல்லாத வறண்ட பூமியில் தார்ச் சாலை அமைத்தால் கூட பரவாயில்லை. ஆனால், மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி அமைக்கப்படும் பசுமை வழிச் சாலை எங்களுக்கு வேண்டாம் என பெண்கள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் கண்ணீருடன் தெரிவித்தனர்.
இக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியது : பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு தென்னை மரத்துக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரையும், விவசாய நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ. 9 கோடி வரையிலும் இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சென்னை அருகேயுள்ள நிலங்களுக்கு கூட அதிகபட்சமாக ரூ.3 கோடி வரையிலும் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும். காய்ந்து போன தென்னை மரங்களுக்கு தற்போது மாநில அரசு ரூ.105 வழங்கி வருகிறது. ஆனால் பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்படும் தென்னை மரங்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறுவது முற்றிலும் பொய்யானது. 
ஆனால், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து விவசாயிகளை மூளைச் சலவை செய்து மத்திய, மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. பசுமை வழிச்சாலை அமைந்தால் சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் வகையில் தான் நிலத்தடியில் சிறு பாலங்கள் இருக்கும். சாலையின் குறுக்கே மக்கள் நடந்துகூடச் செல்ல முடியாது. 
அதேபோல், சென்னை முதல் சேலம் வரையிலும் 8 இடங்களில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்படும். இந்தச் சாலையில் செல்ல வேண்டுமெனில், கட்டணம் செலுத்த வேண்டும். பசுமை வழி விரைவுச் சாலையால் விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது. 
பசுமைச் சாலையில் சென்னைக்கு சென்றால் 5.30 மணி நேரம் ஆகும். ஆனால், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஊத்தங்கரை, அரூர் வழியாகச் செல்லும் சேலம் - சென்னை வரையிலான சாலையில், சென்னைக்குச் சென்றால் 4.30 மணி நேரமே ஆகும்.
எனவே, எட்டு வழி விரைவுச் சாலைத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட்டு, அதற்கு மாற்றாக வாணியம்பாடி வழியாகச் செல்லும் சென்னை முதல் சேலம் வரையிலான தார்ச் சாலையை ஆறு வழிச் சாலையாக மாற்றம் செய்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தலாம். பசுமை வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளின் கருத்துக் கேட்புக்கு பிறகு, எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com