மாணவர்களுக்கு இலக்கியப் போட்டிகள்: இராமலிங்கர் பணிமன்றம் ஏற்பாடு

அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாக சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2018) மண்டல, மாநில அளவிலான இலக்கியப்

அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாக சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான (2018) மண்டல, மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள் ஜூலை 28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.
இது குறித்து சென்னை இராமலிங்கர் பணி மன்றச் செயலர் சி.இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி: 
அருட்செல்வர் நா.மகாலிங்கம் நினைவாகவும், சென்னை இராமலிங்கர் பணிமன்றத்தின் 53-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையிலும் கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கலை, இலக்கியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தப் போட்டிகள் தமிழகம், புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் எட்டு மண்டலங்களாகப் பிரித்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் நடத்தப்படவுள்ளது. 
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் (இளநிலை, முதுநிலை மாணவர்கள் மட்டும்): 
கட்டுரைப் போட்டி: ஒளி வழிபாட்டில் ஓங்கும் தத்துவம்' அல்லது அருளியல் நெறியில் அண்ணலும் வள்ளலும்' என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில் 8 பக்கங்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.
கவிதைப் போட்டி: தலைப்பு அரங்கில் வழங்கப்படும்.
பேச்சுப் போட்டி: உயிர்க் கருணையே சன்மார்க்கம்' அல்லது வடலூர் விளக்கில் காந்திய வெளிச்சம்'.
பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் (9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை): 
இசைப் போட்டி- திருவருட்பா- 6-ஆம் திருமுறை-அபயத் திறன் ( முதல் பத்து பாடல்களில் ஏதேனும் 1 அல்லது 2; தனி நபராகவோ இருவர் கொண்ட குழுவாகவோ பங்கேற்கலாம்);
மனனப் போட்டி- திருவருட்பா- 6-ஆம் திருமுறை- முறையீடு (10 பாடல்கள்);
பேச்சுப் போட்டி- வள்ளுவர் வழியும் வள்ளலார் மொழியும் அல்லது பாரதி கவிதையில் மிளிர்வது காந்தியமே.
மண்டல அளவில் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: தஞ்சாவூர் (ஜூலை 28)- மருதுபாண்டியர்கல்லூரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்; விழுப்புரம் (ஜூலை 29)- இராமகிருஷ்ணா வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராமகிருஷ்ணாபுரம், பூந்தோட்டம், விழுப்புரம்; மதுரை (ஆக.4)- தியாகராசர் கல்லூரி, காமராஜர் சாலை, மதுரை; சென்னை (ஆக.5)- சாவித்திரி அம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி, சென்னை சம்ஸ்கிருதப் பள்ளி பின்புறம், மயிலாப்பூர்; சேலம் (ஆக.11)- பெரியார் பல்கலைக்கழகம், சேலம்; திருநெல்வேலி (ஆக.12)- லிட்டில் பிளவர் மாடல் பள்ளி, சேரன்மாதேவி சாலை, நெல்லை நகரம்; கோயம்புத்தூர் (ஆக.18)- டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி, காளப்பட்டி சாலை, நேருநகர், கோயம்புத்தூர்; திருச்சி (ஆக.19)- கி.ஆ.பெ.விஸ்வநாதம் மேல்நிலைப்பள்ளி, மக்கள் மன்றம் அருகில், தில்லைநகர், திருச்சி.
மண்டல அளவில் ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோர் பொள்ளாச்சியில் நடைபெறும் மாநில அளவிலான இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவர். 
பரிசு எவ்வளவு? மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.5,000, ரூ.3,000, ரூ.2,000 வழங்கப்படும். அதேபோன்று மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் மூன்று பரிசுகளாக ரூ.10,000, ரூ.7,500, ரூ.5,000 வழங்கப்படும். 
போட்டியில் பங்கேற்க... போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய www.mcet.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இராமலிங்கர் பணி மன்றம், டாக்டர் மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, உடுமலை சாலை, பொள்ளாச்சி- 642 003' என்ற முகவரிக்கோ அல்லது ramalingar@mcet.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ போட்டி நடைபெறுவதற்கு 5 நாள்கள் முன்னதாக அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 94456 37190, 99761 44451 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com