மாற்றுத்திறனாளி சிறுமி மீது பாலியல் வன்முறை: 17 பேருக்கு ஜூலை 31 வரை காவல்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை ஜூலை 31 ஆம் தேதி வரை காவலில் வைக்க மகளிர்
மாற்றுத்திறனாளி சிறுமி மீது பாலியல் வன்முறை: 17 பேருக்கு ஜூலை 31 வரை காவல்

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரை ஜூலை 31 ஆம் தேதி வரை காவலில் வைக்க மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலியல் கொடுமை: சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அந்தப் பகுதியில் உள்ள சிறப்புப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த அந்தச் சிறுமி செவித்திறன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாதவர். பள்ளிக்குச் செல்ல அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த லிப்டை அந்த மாணவி பயன்படுத்தி
வந்துள்ளார்.

17 பேர் சேர்ந்து...: அந்தக் குடியிருப்பின் லிப்ட் இயக்குநர், காவலாளிகள், எலக்ட்ரீஷியன்கள் உள்ளிட்ட பலர் அந்தச் சிறுமியை பாலியல் கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அயனாவரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, ரவிக்குமார், பரமசிவம், முருகேஷ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர். 

மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்: இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன் ஆஜர்படுத்தப்பட்டனர். 

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட 17 பேரையும் வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

ஆஜராக மாட்டோம்: இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், சிறுமி மீதான பாலியல் கொடுமைச் சம்பவம் கண்டிக்கத்தக்கது. பாலியல் கொடுமையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்காக வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்; இலவச சட்ட உதவி மையத்தின் சார்பிலும் யாரும் ஆஜராக மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

பரபரப்புக்குள்ளான மகளிர் நீதிமன்றம்: இந்தச் சம்பவத்தால் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை மகளிர் நீதிமன்றம் பரபரப்பாக காணப்பட்டது. 
கொடுமையாளர்களுக்கு அடி உதை சிறுமியை பாலியல் கொடுமை செய்ததாகக் கூறப்படும் 17 பேரை ஆஜர்படுத்த கொண்டு வந்தபோது மகளிர் நீதிமன்ற வாயிலில் காத்திருத்த வழக்குரைஞர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் கொடுமையாளர்கள் 17 பேரும் காயமடைந்தனர். இதனையடுத்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்த போலீஸார், அவர்களை மீட்டு நீதிமன்ற அறைக்குள் வைத்துப் பூட்டினர்.

கூடுதல் பாதுகாப்பு: இந்த தகவலை அறிந்து நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான வழக்குரைஞர்கள் குவிந்ததால் பாதுகாப்புப் பணிக்கு ஏராளமான போலீஸாரும் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்துக்குள் போலீஸ் உயர் அதிகாரிகள் ஜெயராம், ஆனந்தகுமார் சின்ஹா, கலைச்செல்வன், அன்பு ஆகியோரும் வந்தனர். நீதிபதிகள் சுபாதேவி, மஞ்சுளா, ஜெயந்தி, தர்மன் மற்றும் வழக்குரைஞர் சங்கப் பிரதிநிதிகளுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், வழக்குரைஞர்கள் கலைந்து செல்லவில்லை. இதனால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அழைத்துச் செல்வதில் போலீஸாருக்குச் சிரமம் ஏற்பட்டது.

நேரம் செல்லச் செல்ல வழக்குரைஞர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இரவு 7 .45 மணியளவில் போலீஸ் பாதுகாப்புடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாதுகாப்பாக வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அப்போதும் சிலர் போலீஸ் வாகனத்தைத் தாக்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com