அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாக்குமூலம் தந்ததாக தகவல்

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமார் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்குரைஞர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். 

சசிகலாவுக்கு எதிராக ஆணையத்தில் பிரமாணப் பத்திரம், சாட்சியம் அளித்தவர்களிடமும் அவரது தரப்பு வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆஜர்: ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். 

அதன் அடிப்படையில், ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு அவர் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டனில் இருந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநர் சுரேஷ்குமாருக்கு அண்மையில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. 

இதையடுத்து, ஆணையத்தில் புதன்கிழமை ஆஜரான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமாரிடம் நீதிபதி ஆறுமுகசாமி சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா மயக்க நிலையில் இருந்தார்: இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு, போயஸ் கார்டனில் உள்ள வீட்டில் ஜெயலலிதா என்ன நிலையில் இருந்தார்?, அப்போது யாரெல்லாம் அங்கு இருந்தார்கள்? போன்ற கேள்விகளை ஆணைய வழக்குரைஞர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த, ஓட்டுநர் சுரேஷ்குமார், கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி இரவு போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பின்பேரில் மருத்துவக் குழுவினருடன் சென்றோம். 
அங்கு, மயக்க நிலையில் இருந்த அவரை ஸ்ட்ரெச்சர் மூலம் ஆம்புலன்ஸில் ஏற்றினோம். அப்போது, சசிகலா, டாக்டர் சிவகுமார், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உடன் இருந்தார். 

அதன் பின்பு வாகனம் ஓட்டியதால், பின்புறம் நடந்தது குறித்து தனக்குத் தெரியாது என சுரேஷ்குமார் தெரிவித்தார் என்று வழக்குரைஞர் ராஜ்குமார் பாண்டியன் கூறினார்.

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை ஜூலை 18-ஆம் தேதி ஆஜராகுமாறு விசாரணை ஆணையம் அண்மையில் அழைப்பாணை அனுப்பி இருந்தது. 

இந்நிலையில், குருமூர்த்திக்குப் பதில் அவருடைய வழக்குரைஞர் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி மனு தாக்கல் செய்தார். 

அதில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரை நான் சந்தித்தது இல்லை. அவர் உடல்நிலை குறித்து எனக்கு எந்தத் தகவலும் தெரியாது. 

எனவே உங்கள் விசாரணைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
எனக்கு அனுப்பிய அழைப்பாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று குருமூர்த்தி தனது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com