இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர்.. ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து கண் கலங்கிய முதல்வர்

தனது இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று அவரை நினைவு கூர்ந்தபோது கண் கலங்கினார் முதல்வர் பழனிசாமி.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சேலம்: தனது இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்று அவரை நினைவு கூர்ந்தபோது கண் கலங்கினார் முதல்வர் பழனிசாமி.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை திறந்து வைத்த பிறகு முதல்வர் பழனிசாமி மனம் உருகிப் பேசினார்.

அப்போது, சட்டப் போராட்டம் காரணமாகத்தான் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு வெற்றி பெற்றுள்ளது. 

அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது கூட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்துத்தான் எங்களுடன் பேசினார். இறுதி மூச்சுவரை அவர் காவிரிக்காக போராடினார். காவிரி பற்றி அவர் பேசியதுதான் எங்களிடம்  பேசிய கடைசி பேச்சாக அமைந்துவிட்டது என்று கூறி முதல்வர் கண்கலங்கினார்

ஜூலை மாதத்தில் கர்நாடகா நமக்குத் தர வேண்டியது 31 டிஎம்சி தண்ணீர். ஆனால், ஜூலை 18ம் தேதிக்குள் காவிரியில் 25 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. இறைவன் அருளால் தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த மாதம் இந்த நாளில் மேட்டூர் அணையில் நீர் இல்லை. அதனால் வழக்கமாக திறக்கும் ஜூன் 18ம் தேதியன்று பாசனத்துக்காக நீர் திறக்கப்படவில்லை. ஆனால், ஒரே மாதத்தில் இறைவன் அருளால், அம்மாவின் ஆசியால் இன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. விரைவில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும்.

கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. தற்போது 2 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக நீர் திறப்பு இன்று இரவுக்குள் 20 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், டெல்டா பகுதிகளில் கடைமடைப் பகுதிகள் வரை நீர் கிடைக்கும் அளவுக்கு மேட்டூர் அணையில்  இருந்து தேவையான அளவுக்கு நீர் திறந்துவிடப்படும் என்று கூறினார்.

மேலும், மேட்டூர் அணையில் நினைவுத் தூண் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த முதல்வர் பழனிசாமி, மேட்டூர் அணை பூங்காவை மேம்படுத்தவும், நினைவுத் தூண் அமைக்கவும் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அறிவித்தார்.

85வது முறையாக டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com