ஜூலை மாதம் காவிரியில் நமக்கு வர வேண்டிய தண்ணீர் எவ்வளவு? வந்து சேர்ந்தது எவ்வளவு?

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி தமிழக அணைகளை நிரப்பி வருகிறது.
ஜூலை மாதம் காவிரியில் நமக்கு வர வேண்டிய தண்ணீர் எவ்வளவு? வந்து சேர்ந்தது எவ்வளவு?

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி தமிழக அணைகளை நிரப்பி வருகிறது.

அகண்ட காவிரியை கடந்த சில ஆண்டுகளாக வறண்ட காவிரியாகவே தமிழர்கள் கண்டு மனம் வெதும்பி வந்த நிலையில், தற்போது கரைபுரண்டு ஓடி வரும் வெள்ளம் மனதை சற்று மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கர்நாடகாவின் முக்கிய அணைகளான கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகள் நிரம்பியதால் அணைக்கு வரும் நீர்வரத்து முழுக்க காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு காவிரியில் ஒரு லட்சம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 109 கன அடியை எட்டிவிட்டது. அணையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இது படிப்படியாக இரவுக்குள் 20 ஆயிரம் கன அடியாக உயரும்.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வரைவில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், காவிரியில் திறந்து விடப்படும் நீரை நாம் உபரி நீர் என்கிறோமே, அது கர்நாடகா நமக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரின் கணக்கில் வருமா? வராதா? எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும்? எவ்வளவு திறந்து விடப்பட்டுள்ளது என்ற சந்தேகம் நமக்கு எழத்தான் செய்கிறது.

அது பற்றிய ஒரு பார்வை..
அதாவது, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் காவிரியில் இருந்து கர்நாடக அரசு தமிழகத்துக்கு  9.19 டிஎம்சி மற்றும் ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

மத்திய நீர்வள ஆணையம் பிலிகுண்டுலு நீர்த்தேக்கத்தில் அமைத்துள்ள நதிநீர் அளவீட்டுக் கருவியின் மூலம் அளக்கப்பட்ட அளவின் அடிப்படையில் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், கடந்த ஜூன் மாதம் மட்டும் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 13.29 டிஎம்சி தண்ணீரை உபரி நீராக அதாவது கர்நாடக அணைகள் நிரம்பிவிட்டதால் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதம் நமக்கு சேர வேண்டிய காவிரி நீரை விட 4.1 டிஎம்சி தண்ணீர் அதிகமாகவே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. 

வழக்கமாக திறந்து விட வேண்டிய நீரையே திறந்து விடாமல் அடம்பிடிக்கும் கர்நாடகாவை, கூடுதலாக நீர் திறக்க வழி காட்டிய வருணனுக்கு நிச்சயம் தமிழர்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

மேலும், ஜூலை 14ம் தேதி நிலவரப்படி தமிழகத்துக்கு காவிரியில் இதுவரை 14.72 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்னும்  இரண்டு வார காலத்துக்குள் காவிரியில் 12.42 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும்.

ஒருவேளை காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தால், ஜூலை மாதத்திலும் கூடுதலாக தண்ணீர் கிடைக்க வாய்ப்பு ஏற்படும்.

அதாவது, ஒவ்வொரு மாதமும் கர்நாடகத்திலிருந்து ஆகஸ்டு மாதம் 45.95 டி.எம்.சி, செப்டம்பர் மாதம் 36.76 டி.எம்.சி, அக்டோபர் மாதம் 20.22 டி.எம்.சி, நவம்பர் மாதம் 13.78 டி.எம்.சி, டிசம்பர் மாதம் 7.35 டி.எம்.சி, ஜனவரி மாதம் 2.7 டி.எம்.சி பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடக அரசு காவிரியில் திறந்து விடப்பட வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎம்சி என்றால் எவ்வளவு தண்ணீர் தெரியுமா?
ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி நீர். அதாவது ஆங்கிலத்தில் தௌசன் மில்லியன் கியூபிக் ஃபீட் என்பதைத்தான் சுருக்கி டிஎம்சி என்கிறோம்.

ஒரு கன அடி நீர் என்பது 28.3 லிட்டர் தண்ணீர். ஒரு டிஎம்சி என்பது 2,830 கோடி லிட்டர் தண்ணீர். ஒரு டிஎம்சி தண்ணீர் இருந்தால் சென்னை மாநகருக்கு ஒரு மாதத்துக்கான குடிநீர்  தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

அந்த வகையில் கிருஷ்ணராஜ சாகர் அணையின் மொத்த நீர் கொள்ளவு 45.05 டிஎம்சி. மேட்டூர்  அணையின் முழுக் கொள்ளளவு 93.4 டிஎம்சியாகும். சரியாக சொல்வது என்றால் இரண்டு கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு ஒப்பானது நமது மேட்டூர் அணை. 

இந்திய அளவிலும் சரி, தமிழகத்திலும் சரி மிகப்பெரிய அணையாக மேட்டூர் அணை விளங்குகிறது. 1934ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணை கட்ட ஆரம்பிக்கப்பட்டு சரியாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு பணி முடிந்தது. சுமார் 1,700 மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அணைதான், தமிழகத்தின் சுமார் 12க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com