பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளித்து வாக்களிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்ற ஜனநாயகத்திலும், இந்துத்துவாவின் பிளவுபடுத்தும் பிற்போக்கு அரசியலுக்கும் எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையிலும், ஒற்றைச் செயல் திட்டத்தை நிறைவேற்றிடும் நோக்கத்திலும் ஆக்கபூர்வமான திருப்புமுனையாக அமையும் என்று நாடெங்கிலும் எதிர்பார்க்கப்படுகிறது. “வளர்ச்சி” “வேலை வாய்ப்புகளை உருவாக்குவது” “ஊழலை ஒழித்து கருப்புப் பணம் முழுவதையும் வெளிக்கொணர்வது" "பொருளாதார முன்னேற்றம் "வேளாண்மை விளைபொருள்களின் விலையை இரட்டிப்பாக்குவது" போன்ற தேர்தல் முழக்கங்களை முன் வைத்து நாட்டுமக்களை ஏமாற்றி வெற்றி பெற்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்றைக்கு கொடுத்த வாக்குறுதிகளை அப்படியே மறந்து விட்டு, இந்துத்துவா அமைப்புகளின் கிடுக்கிப் பிடியிலிருந்து மீள முடியாமல், இந்தியாவின் பன்முகத்தன்மையை இந்த நான்காண்டு காலம் சிறிது சிறிதாகச் செல்லரிக்கச் செய்து, கடும் சோதனைக்குள்ளாக்கியிருக்கிறார் என்பது வேதனை மிகுந்ததாக அமைந்துள்ளது.

“பாராளுமன்றத்தின் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்கி” தன் பிரதமர் பயணத்தைத் தொடங்கிய மோடி அந்த பாராளுமன்றத்தையும் மதித்து விவாதங்களில் பங்கேற்காமல், ஜனநாயகத்தின் சாராம்சமான விவாதங்களுக்கும் கருத்துரிமைக்கும் இடம் அளிக்காமல் “மெஜாரிட்டி” இருக்கிறது என்ற ஒரே காரணத்தில், ஜனநாயகத்தின் திருக்கோயிலாக இருக்கும் பாராளுமன்றத்திற்குள் இன்றைக்கு எதேச்சதிகாரத்திற்குச் சிவப்புக் கம்பளம் விரித்திருக்கிறரார்.

“பத்து கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறோம்” என்ற பா.ஜ.க. அரசு இன்றைக்கு பல கோடி பேரின் வேலை வாய்ப்புகளை, பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாகவும், குழப்பமான பொருளாதார கொள்கைகளாலும், குளறுபடியான ஜி.எஸ்.டியாலும் பறித்திருக்கிறது. “கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோம்”என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது. “ஊழல் ஒழிப்பு” எங்கள் முதல் உத்தரவாதம் என்று வாக்குறுதி அளித்த பா.ஜ.க இன்றைக்கு “லோக்பால்” அமைப்பைக் கூட உருவாக்க முடியாமல் உச்சநீதிமன்றத்தில் ஒவ்வொரு விசாரணையிலும் “வாய்தா” வாங்கிக் கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரத்திற்கு கைவிலங்கு போடப்படுகிறது. அரசியல் சட்டத்தின்படி தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் எல்லாம் இன்றைக்கு நிலைகுலைந்து நிற்கின்றன. கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள மக்களின் நம்பிக்கையாக இருக்கும் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளே “ஜனநாயகத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும்” என்று பேட்டி அளிக்கும் ஒரு அசாதாரணமான சோகச் சூழ்நிலை நீதித்துறையில் மத்திய பா.ஜ.க. ஆட்சியால் உருவாக்கப்பட்டது.

அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களான “சமூக நீதி”“மதசார்பற்ற தன்மை”“ஜனநாயகம்”“பன்முகத்தன்மை”“கூட்டாட்சித் தத்துவம்”என அனைத்தும் பா.ஜ.க. ஆட்சியில் குறி வைத்து தாக்கப்பட்டு அரசியல் சட்டமே அலங்கோலத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்று கூறி, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் சர்வாதிகாரத்தை நோக்கியும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள அதிகாரங்களை எல்லாம் கங்கணம் கட்டிக் கொண்டு திட்டமிட்டுப் பறிக்கிறது. மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு, பல்கலைக்கழக மான்யக்குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் அமைப்பது, மாநிலங்களில் உள்ள அணைகளை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள சட்டம் கொண்டு வருவது, சிறு வியாபாரிகள் எல்லாம் திக்குமுக்காடும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் எண்ணற்ற குழப்பங்களை உருவாக்கியது, மாவட்ட நீதிபதிகள் நியமனத்திற்குக் கூட அகில இந்தியத் தேர்வு நடத்த முனைவது என்று அடாவடியாக “மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து” அரசியல் சட்டத்திற்கு விரோதமாகச் செயல்படுகிறது. அரசியல் சட்டம் வழங்கிய “பொதுப்பட்டியல் அதிகாரங்கள்” மற்றும் “மாநிலப் பட்டியல் அதிகாரங்கள்” போன்றவற்றை நீர்த்துப் போக வைக்கிறது பா.ஜ.க. அரசு.

மாற்றுச் சித்தாந்தம் கொண்ட தலைவர்களின் சிலைகளை உடைப்பது, வதந்திகளைப் பரப்பி நாடு முழுவதும் தலித்துகளை கொலை செய்யும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காதது, வெறுப்புப் பேச்சுக்களை ஆழ விதைக்கும் அமைச்சர்களுக்கு ஊக்கமளிப்பது, பா.ஜ.க.விற்கு எதிரான கருத்து சொல்வோரை “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்துவது - சி.பி.ஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்து, எதிர்கட்சிகளை அடக்கி ஒடுக்க சோதனைகள் நடத்துவது போன்றவைதான் பா.ஜ.க.வின் நான்கு ஆண்டுகால எதிர்மறைச் சாதனைகளாகும்.

“ராஜ்பவன்கள்” பா.ஜ.க.வின் “மாநில தலைமையகங்களாக” மாற்றப்பட்டு, அங்கிருந்து அரசியல் நடவடிக்கைகள் தாராளமயமாக்கப்பட்டன. விவசாயிகள், தொழிலாளர்கள் சிறுகுறு வணிகர்கள் கடுமையாக இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். சிறுபான்மையின மக்கள் மீது தனி யுத்தமே நடத்தி அவர்களைத் தனிமைப்படுத்தி நிரந்தர அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. ஒவ்வொரு இந்தியனும் தன் இதயத்தில் வைத்துக் போற்றிப் பாராட்டும் இராணுவத்தில் கூட “அரசியல்” செய்வதை மத்திய பா.ஜ.க. அரசு விட்டு வைக்கவில்லை என்பது வேதனைக்குரியது. மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவைக் கூட இன்றுவரை நிறைவேற்ற பா.ஜ.க. அரசு முன் வரவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கி இன்றைக்கு சேலம் எட்டுவழிப் பசுமைச்சாலைத் திட்டம் வரை தமிழக மக்களின் கருத்துகளை மதிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரும் மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் உணர்வுகளை இதுவரை மதிக்கவில்லை. 15 ஆவது நிதிக்குழுவின் தன்னிச்சையான “விசாரணை வரம்பினால்”தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியாதாரத்தை திட்டமிட்டு வெட்டும் நடவடிக்கையில் மத்திய பா.ஜ.க அரசு ஈடுபட்டுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட “எய்ம்ஸ்”மருத்துவமனையைப் பெறவே நீதிமன்றத்தின் மூலம் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாட்டு மக்கள் தள்ளப்பட்டார்கள். மாநிலத்திற்கு வர வேண்டிய மத்திய அரசு நிதி மறுக்கப்படுகிறது. மாநில சுயாட்சிக்குக் கமிஷன் அமைத்து முதன் முதலில் குரல் கொடுத்த தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் “இரட்டையாட்சி” முறை நடத்த தூண்டி விட்டு, மாநில உரிமைகளை பா.ஜ.க. அரசு பந்தாடிக் கொண்டிருக்கிறது. அன்னைத் தமிழ் புறக்கணிக்கப்பட்டு, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழிக்கு அரியாசனம் போடும் ஆட்சியாக மத்திய பா.ஜ.க. அரசு அமைந்திருக்கிறது. இந்தித் திணிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து, செம்மொழியாம் தமிழை சிறுமைப்படுத்தியது. மத்திய அரசின் நிதி நிலை அறிக்கைகளில் தமிழகத்திற்கான திட்டங்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. ஒரே வார்த்தையில் கூறுவதென்றால் மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நான்காண்டு ஆட்சியில் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டுள்ளது என்பதை வேதனையோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, சர்வாதிகாரத்தின் முள்ளாசனத்தில் அமர்ந்து கொண்டு ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கி, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களை எல்லாம் தோற்கடித்து இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு மாபெரும் இழுக்கை ஏற்படுத்தியுள்ள பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் தமிழ்நாட்டு மக்களின் ஏகோபித்த உணர்வுகளை அவமதித்து, தமிழ்நாடு சட்டமன்றத்தின் தீர்மானங்களைத் தூக்கியெறிந்து, மாநிலத்தின் உரிமைகளை எல்லாம் அடாவடியாகப் பறித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தினை மக்களவையில் அ.தி.மு.க ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com