பாலியல் கொடுமைக்குள்ளான சிறுமி: குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

பாலியல் கொடுமைக்குள்ளான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாலியல் கொடுமைக்குள்ளான சிறுமி: குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க உத்தரவு

பாலியல் கொடுமைக்குள்ளான சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சூர்யபிரகாசம், சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி உள்ளார். 
இதே போன்று திருவண்ணாமலையில் ரஷிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை சிலர் கூட்டாக பாலியல் கொடுமை செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரித்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமை தொடர்பாக நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்'' என முறையீடு செய்தார்.
துரதிர்ஷ்டவசமானது-தலைமை நீதிபதி: அப்போது தலைமை நீதிபதி, இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது; இதுபோன்ற வக்கிரங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். 
எனவே, இந்தச் சம்பவத்தை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வழக்காக எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. ஆனால், பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விரைவாக விசாரித்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
மனநல சிகிச்சை அளிக்க வேண்டுகோள்: அப்போது மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன், பாதிப்புக்குள்ளான அயனாவரம் சிறுமியை 24 மணி நேரத்துக்குள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினரிடம் ஒப்படைக்கவில்லை. 
அந்தச் சிறுமியின் தற்போதைய மனநிலை என்ன, அவர் பாதுகாப்பாக உள்ளாரா, ஏதேனும் ரகசிய விசாரணை நடத்தப்படுகிறதா, மருத்துவ சிகிச்சைகள் ஏதேனும் வழங்கப்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை. எனவே அந்த சிறுமிக்கு முதலில் மனநல சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்' என்றார்.
குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைக்கவில்லை: அப்போது குழந்தைகள் நலக் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மெஹருநிஷா, அனைத்து மாவட்டத்திலும் குழந்தைகள் நலக்குழு அமைக்க நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாவட்டங்களில் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் இதுவரை முறையாக நியமிக்கப்படவில்லை. அதே போன்று பாதிக்கப்பட்ட அயனாவரம் சிறுமியையும் போலீஸார் குழந்தைகள் நலக் குழுவிடம் இதுவரை ஒப்படைக்கவில்லை எனத் தெரிவித்தார்.
நீதிபதிகள் உத்தரவு: இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்களை நியமிக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். 
பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்துக்கும் உரிய ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கும் வகையில் சிறுமியை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com