பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 135 பேருக்கு சேர்க்கை: 32 பேர் பொறியியல் பட்டதாரிகள்

இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான (பி.எட். ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் நாளில் 135 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து,

இரண்டு ஆண்டுகள் இளநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்புக்கான (பி.எட். ) மாணவர் சேர்க்கை கலந்தாய்வின் முதல் நாளில் 135 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இவர்களில் 32 பேர் பொறியியல் பட்டதாரிகள் ஆவர்.
தமிழகத்தில் 600 -க்கும் அதிமான பி.எட். கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,707 பி.எட். இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை, சென்னை காமராஜர் சாலையில் உள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது. 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
இதுகுறித்து பி.எட். சேர்க்கை செயலர் எஸ்.தில்லைநாயகி கூறியது: முதல் நாளில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினர் மற்றும் பொறியியல் பட்டதாரிகளுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டது. 
இதில் பார்வை மாற்றுத்திறனாளிகளில் அழைக்கப்பட்ட 35 பேரில் 32 பேரும், உறுப்பு மாற்றுத்திறனாளிகளில் அழைக்கப்பட்ட 85 பேரில் 53 பேரும் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இதேபோல் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் பிரிவில் அழைக்கப்பட்ட 21 பேரில் 18 பேர் இடங்களைத் தேர்வு செய்தனர். பொறியியல் பட்டதாரிகள் பிரிவில் அழைக்கப்பட்ட 62 பேரில் 32 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர் என்றார் அவர்.
கலந்தாய்வின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை பொதுப் பிரிவின்கீழ் தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கான பி.எட். சேர்க்கை நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூலை 20- இல் தாவரவியல், விலங்கியல் பாடங்களுக்கும், ஜூலை 21 ஆம் தேதி இயற்பியல், வரலாறு பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
ஜூலை 22 -ஆம் தேதி வேதியியல், மனை அறிவியல், பொருளியல், வணிகவியல் பாடங்களுக்கும், ஜூலை 23 -ஆம் தேதி புவியியல், கணினி அறிவியல், கணிதப் (ஆண்கள்) பாடங்களுக்கும், கடைசி நாளான ஜூலை 24 -ஆம் தேதி கணிதப் (பெண்கள்) பாடத்துக்கும், பிற்பகலில் எஸ்.டி. பிரிவினருக்கும் பி.எட். கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com