பொறியியல் கலந்தாய்வு தேதி: விசாரணை ஜூலை 20-க்கு ஒத்திவைப்பு

பொறியியல் படிப்பு கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் தொடுத்த வழக்கு விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பொறியியல் படிப்பு கலந்தாய்வை ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் தொடுத்த வழக்கு விசாரணையை ஜூலை 20-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
பி.இ. கலந்தாய்வை நடத்தி முடிக்க ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல் நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஏன் கலந்தாய்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்கிறீர்கள்' என அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது, நீட் தேர்வு வழக்கு விவகாரத்தில் கருணை மதிப்பெண்கள் வழங்கவும், புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வு நடத்தவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவு குறித்து வழக்குரைஞர் எடுத்துரைத்தார். மேலும், மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மாணவர்கள் பி.இ. கலந்தாய்வில் பங்கேற்கவும் வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
இதையடுத்து, நீட் தேர்வு கருணை மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பின் நகலை மனுவுடன் இணைத்து தாக்கல் செய்யுமாறு கூறிய நீதிபதிகள், அம்மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்திருந்தனர்.
அதன்படி, இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, எல். நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்ததது. அப்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் வழக்குரைஞர்கள் வி. கிரி, கே.வி. விஜயகுமார் ஆகியோர் ஆஜராகி, மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் கலந்தாய்வில் சேர்வார்கள். இதனால், கலந்தாய்வு தேதியை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்க வேண்டும்' என்றனர்.
இதையடுத்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்தாய்வில் எத்தனை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கூடுதல் ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 20) தாக்கல் செய்ய வேண்டும். 
வழக்கு விசாரணை ஜூலை 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' எனத் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com