கடைக்கோடி விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
மேட்டூர் சின்ன பூங்கா மேம்பாட்டுப் பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், 
மேட்டூர் சின்ன பூங்கா மேம்பாட்டுப் பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. உடன், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், 

கடைக்கோடியில் இருக்கின்ற விவசாயிகளுக்கும் பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
மேட்டூர் அணை திறப்பு விழாவில் கலந்து கொண்டு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டதன் வெற்றியை நினைவுகூரும் வகையில் ரூ.2 கோடியில் மேட்டூர் அணை வளாகத்தில் நினைவுத் தூண் அமைத்தல், பூங்கா மேம்படுத்துதல் பணிக்கு அடிக்கல் நாட்டி வைத்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது:
தமிழக மக்களின் 48 ஆண்டு கால காவிரி நீர் உரிமையைப் பெறுவதற்காக விவசாயிகள், பொதுமக்களுடன் இணைந்து போராடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப் போராட்டத்தின் மூலம் காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 177.25 டி.எம்.சி. தண்ணீர் ஒவ்வோர் ஆண்டும் கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டும். காவிரி நீர் உரிமைக்காக 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து மத்திய அரசுக்கு எடுத்துச் சென்று, தன்னுடைய இறுதி மூச்சு இருக்கும் வரை தமிழக மக்களுக்கு உழைத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. 
அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சேர்க்கப்பட்ட இரண்டாவது நாளில் காவிரி நீர்ப் பிரச்னை தொடர்பான கர்நாடகம், தமிழக அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக்கு, அப்போது பொதுப் பணி துறை அமைச்சராக இருந்த என்னை அனுப்பி வைத்தார். தன்னுடைய உடல்நிலையைக்கூட பொருட்படுத்தாமல், இறுதிக்கட்டத்தில் காவிரி நீர் தீர்ப்பைப் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காகப் போராடியவர். 
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு இரண்டும் கூடி, விவாதிக்கப்பட்டு, முதற்கட்டமாக நமக்கு ஜூன் மாதத்துக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டது.
இப்போது ஜூலை மாதம், கர்நாடக அரசால் நமக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 31.24 டி.எம்.சி. தண்ணீர். கர்நாடகத்திலிருந்து ஆகஸ்ட்டில் 45.95 டி.எம்.சி, செப்டம்பரில் 36.76 டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி, டிசம்பரில் 7.35 டி.எம்.சி, ஜனவரியில் 2.7 டி.எம்.சி. பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டி.எம்.சி தண்ணீரும் கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்ற நல்ல தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தின் வாயிலாகக் கிடைத்திருக்கிறது. பருவ மழை பெய்து ஒரே மாதத்தில் மேட்டூர் அணை 109 அடியை எட்டியுள்ளது. இன்னும் 3 நாள்களில் 120 அடியை எட்டும்.
தமிழகத்தில் முன்பருவம், காரிப் பருவம் மற்றும் பின்பருவம் ராபி முதலான சாகுபடி பருவத்தில் பயிரிடும் பயிர்களுக்கு உபயோகித்திட 20 முதல் 25 லட்சம் மெட்ரிக் டன் உரம் இந்த ஆண்டுக்குப் பயன்படுத்தப்படவிருக்கிறது.
சம்பா பயிர் சாகுபடி மற்றும் இதர காரிப் பருவப் பயிர்கள் சாகுபடிக்குத் தேவையான ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளன. மேலும், மத்திய அரசு உரங்கள் துறை இணைச் செயலாளர் நடத்திய காணொலிக் காட்சியில், தமிழகத்துக்கு மேலும் கூடுதலாக யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் மற்றும் பிற உரங்களை ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்டா பாசன விவசாயிகளுக்குத் தேவையான நீர் திறக்கப்பட்டிருக்கிறது. படிப்படியாக நீரின் அளவை அதிகரித்து, விவசாயிகளுக்குப் பாசனத்துக்கு எவ்வளவு நீர் தேவைப்படுகிறதோ, அந்தளவுக்கு முழுமையாக கடைக்கோடியிலிருக்கின்ற விவசாயிகளுக்குக்கூட பாசனத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
மேட்டூர் அணை பூங்காவில் நினைவுத் தூண்: இத்துடன் காவிரிப் படுகையில் இருக்கின்ற கிழக்குக் கரை , மேற்குக் கரை பாசன விவசாயிகளுக்கும் குறித்த காலத்திலே தண்ணீர் திறந்து விடப்படும். காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், மேட்டூர் அணை பூங்கா பகுதியில் நினைவு ஸ்தூபி அமைத்தல் மற்றும் மேட்டூர் அணைப் பூங்காவை மேம்பாடு செய்வதற்கான மதிப்பீடான ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழக மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட ராமசாமி படையாச்சியார் பிறந்த நாளை அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிடப்பட்டது. 
இதனிடையே, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், சான்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் ராமசாமி படையாச்சியாருக்கு மணி மண்டபமும், அவருக்கு வெண்கல முழு திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com