நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவில்லை: அதிமுக முடிவு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அதிமுக முடிவு செய்துள்ளது.
நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவில்லை: அதிமுக முடிவு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என அதிமுக முடிவு செய்துள்ளது.
எதிராக வாக்களிக்க உத்தரவு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது மக்களவையில் வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க அதிமுக எம்.பி.க்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையில், ஆந்திர மாநிலத்தின் பிரச்னைக்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அதற்கு நாம் ஏன் ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக முடிவு என்ன?: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் தீர்மானத்தை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுகவுக்கு உறுப்பினர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் சூசகம்: மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக உள்ள எதிர்க்கட்சியான அதிமுக இந்தப் பிரச்னையில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விடையளிக்கும் வகையில், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலத்தில் நிருபர்களின் கேள்விக்கு வியாழக்கிழமை பதிலளித்தார். அவர் அளித்த பேட்டியில், நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாம் கொண்டு வரவில்லை. ஆந்திர மாநிலத்தின் பிரச்னைக்காக அவர்கள் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தின் பிரச்னைக்காக அதிமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் 22 நாள்கள் குரல் எழுப்பினர். அப்போது நம்மை ஆதரிக்க யார் முன்வந்தார்கள்? நமது டெல்டா பாசன விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க எந்த மாநிலம் முன்வந்தது? யாரும் முன்வரவில்லை. அவரவர் மாநிலங்கள் என்று வரும் போது பிரச்னையைக் கிளப்புகிறார்கள்'' என்றார்.
உத்தரவு என்ன? மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என முதல்வர் பழனிசாமி சூசகமாகத் தெரிவித்தாலும், அதிமுகவைச் சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்ற தகவல் வியாழக்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அதிமுகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகி கூறுகையில், ஆந்திரத்தின் பிரச்னைக்காகவே நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. எனவே, இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாமென முடிவு செய்துள்ளோம். தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்க எம்.பி.க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 37 பேர் மக்களவை உறுப்பினர்கள். 13 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள். அவர்களில் தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினரும், மக்களவை உறுப்பினரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய பிரச்னைகள்: நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தாலும், அணை பாதுகாப்பு மசோதா, இந்திய உயர் கல்வி ஆணைய வரைவு மசோதா போன்றவற்றுக்கு தமிழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் அதிமுக எம்.பி.க்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com