புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்குள் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் பேரவையில் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
புதுச்சேரியில் 3 நியமன எம்எல்ஏக்கள் பேரவைக்குள் செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதி

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் நியமனம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் பேரவையில் செயல்படுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரையிலும், துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமிக்க அதிகாரம் உள்ளது. அவர்களது நியமனங்களுக்கு அமைச்சரவையின் கருத்துகளை துணை நிலை ஆளுநர் கேட்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. மேலும், அவர்களை தகுதி நீக்கம் செய்ய சட்டப் பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, இந்த நியமனத்துக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட வேண்டும். அவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப் பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வும், புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி முன் வைத்த வாதம்: கூட்டாட்சி முறையில் ஆட்சி நடத்தி வருகிறோம். கூட்டாட்சி முறையில் அரசியலமைப்புச் சட்டம் 71-ஆவது பிரிவு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலந்து ஆலோசிக்காமல் எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த விவகாரம் தீவிரமான அரசியலமைப்புப் பிரச்னையாகும். இது குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அதன் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால், 'புதுச்சேரி யூனியன் பிரதேசமாகும். யூனியன் பிரதேசத்தை நிர்வகிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த வகையில் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்களுக்கு மத்திய அரசு சில அதிகாரங்களை வழங்கியுள்ளது. புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்க அண்டை மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்த முடியும். இதன் காரணமாகவே புதுச்சேரிக்கு என உயர்நீதிமன்றம் இல்லை. மாறாக சென்னையில் உயர்நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கூட்டாட்சி முறையில் அங்கமாக உள்ள யூனியன் பிரதேசத்துக்கு தன்னாட்சியோ, தன்னாட்சி அதிகாரங்களோ இல்லை. துணைநிலை ஆளுநர் தனியாக சட்டத்தை இயற்ற முடியாது. யூனியன் பிரதேசங்களுக்கான சட்டங்களை நாடாளுமன்றமும், மத்திய அரசும் உருவாக்குகின்றன. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை நியமிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு' என்றார்.
நியமன எம்எல்ஏக்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி, 'நியமன எம்எல்ஏக்களை சட்டப்பேரவையின் காவலர்கள் அனுமதிக்க மறுத்து வருகின்றனர். இதுதான் ஜனநாயகமா?' என்றார். 
வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த மனுக்களை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் செயல்பட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசும் புதுச்சேரி அரசும் பிரமாணப் பத்திரத்தை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com