லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. இதனால், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்
லாரிகளில் வேலைநிறுத்த அறிவிப்பு துண்டறிக்கையை ஒட்டிய நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்.
லாரிகளில் வேலைநிறுத்த அறிவிப்பு துண்டறிக்கையை ஒட்டிய நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள்.

லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 20) தொடங்குகிறது. இதனால், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது என லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 
நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளை அகற்றி விட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக் கட்டணமாக ரூ. 18,000 கோடியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை 3 மாதங்களுக்கு ஒரு முறை நிர்ணயிப்பதோடு, ஜி.எஸ்.டி.வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். 
லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான 3ஆம் நபர் காப்பீட்டு கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை(ஜூலை 20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. 
இந்தப் போராட்டத்துக்கு நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்துள்ளது. 
இதையடுத்து, நாடு முழுவதும் 65 லட்சம் லாரிகள், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் போராட்டத்தில் பங்கேற்கின்றன.
தினமும் ரூ. 200 கோடி வருவாய் இழப்பு: இந்த நிலையில், நாமக்கல்லில் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரிகளின் முன்பகுதியில் வேலைநிறுத்த துண்டறிக்கையை வியாழக்கிழமை ஒட்டினர்.
அப்போது போராட்டம் குறித்து சங்க நிர்வாகிகள் தெரிவித்தது: மாநிலம் முழுவதும் 4.5 லட்சம் லாரிகள், நாமக்கல் மாவட்டத்தில் 25,000 லாரிகள் ஓடாது. போராட்டத்துக்கான முன்னேற்பாடு பணிகளை அந்தந்த வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் செய்துள்ளனர்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக தமிழக லாரி உரிமையாளர்களுக்கு தினமும் சுமார் ரூ. 200 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும்.
தினமும் ரூ. 5,000 கோடி பொருள்கள் தேக்கம்: வேலைநிறுத்த போராட்டத்துக்கு தமிழ்நாடு லாரி புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் ஆதரவு தெரிவித்து, கடந்த 15 ஆம் தேதி முதல் வடமாநிலங்களுக்கான சரக்குகள் முன்பதிவை நிறுத்தி விட்டனர்.
இதனால், தமிழகம் முழுவதும் உள்ள கிடங்குகளில் ஜவ்வரிசி, ஸ்டார்ச், ஜவுளி, இரும்பு, சிமெண்ட், தானியங்கள், மஞ்சள், பால் பவுடர், தேங்காய் உள்ளிட்டவை கோடிக்கணக்கில் தேக்கமடைந்துள்ளன.
தினமும் வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் ரூ. 5,000 கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கமடைந்து வருகின்றன என்றனர். இதனிடையே அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் பிரதிநிதிகள் வியாழக்கிழமை மாலை மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அமைச்சர், கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க 3 மாத கால அவகாசம் கோரியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரவு மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதுவரை முடிவு ஏதும் எட்டப்படவில்லை எனவும், லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். 
ஏ.ஐ.எம்.டி.சி. தலைவர் சுற்றறிக்கை: இதனிடையே அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) தலைவர் குல்தரன்சிங் அட்வால், வியாழக்கிழமை மாலை அனைத்து மாநில, மாவட்ட, தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு மின்னஞ்சல் மற்றும் கட்செவி அஞ்சல் மூலம் சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும். போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய மாநில, மாவட்ட, தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். 
போராட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் லாரி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருவதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதை நிர்வாகிகள் யாரும் நம்ப வேண்டாம். போராட்டம் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டால், அதன் பிறகு அரசுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தைக்கும் உடன்பட மாட்டோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com